நிரபராதி என்று நிரூபித்து மீண்டும் மந்திரி ஆவேன்: ஈசுவரப்பா

சிவமொக்கா:

பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்த காண்டிராக்டரான சந்தோஷ் கே.பட்டீல் உடுப்பி டவுனில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா மற்றும் அவரது உதவியாளர்கள் ரமேஷ், பசவராஜ் ஆகியோர்தான் காரணம் என்றும் அவர் வீடியோயாவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் உடுப்பி டவுன் போலீசார் மந்திரி ஈசுவரப்பா, அவரது உதவியாளர்கள் மீது சந்தோசை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனால் நெருக்கடிக்கு உள்ளான ஈசுவரப்பா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். முதல்-மந்திரியை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பதற்காக அவர் நேற்று சிவமொக்காவில் இருந்து காரில் புறப்பட்டு பெங்களூருவுக்கு வந்தார். புறப்படுவதற்கு முன்னதாக அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் முன்பு பேசினார்.

அப்போது ஏராளமான பெண்கள் மற்றும் தொண்டர்கள் ஈசுவரப்பாவிடம் ராஜினாமா முடிவை கைவிடக்கோரி கண்ணீர்விட்டு கதறி அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூறி ஈசுவரப்பா உருக்கமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியாக நான் பொறுப்பேற்றதில் என்னைவிட எனது ஆதரவாளர்கள், தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினர்தான் அதிகளவில் மகிழ்ச்சி அடைந்தனர். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை. நான் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபித்து மீண்டும் மந்திரி ஆவேன்.

நான் குற்றமற்றவன் என்பது எனக்கு தெரியும். இருப்பினும் வழக்கின் விசாரணை நடைபெறும் வேளையில் நான் மந்திரி பதவியில் இருந்தால் அது விசாரணையை கெடுக்கும் வகையில் அமைந்துவிடும் என்று பலரும் நினைப்பார்கள். அதனால் நான் எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன்.

இது எனக்கு அக்னி பரீட்சை ஆகும். இதிலிருந்து நான் கண்டிப்பாக மீண்டு வருவேன். அதில் எனக்கு திடமான நம்பிக்கை உள்ளது. இந்த பிரச்சினையில் எனக்கான நீதி கிடைக்கும் என்பது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அங்கிருந்து காரில் ஈசுவரப்பா பெங்களூருவுக்கு புறப்பட்டார். அவரது காரை தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்களது கார்களில் பின்தொடர்ந்து வந்தனர். ேமலும் அவர்கள் சிவமொக்கா நகர் முழுவதும் வாகன பேரணி நடத்தினர்.

இதையும் படிக்கலாம்….கான்ட்ராக்டர் தற்கொலை விவகாரம் -மந்திரி பதவியில் இருந்து விலகினார் ஈஸ்வரப்பா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.