பஞ்சாப் மக்களுக்கு சலுகை மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: ஆம் ஆத்மி அரசு அதிரடி

சண்டிகர்: பஞ்சாப்பில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது. இது, வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், ஒரு மாத ஆட்சியை நிறைவு செய்துள்ள முதல்வர் பகவந்த் மான், தனது மாநில மக்களுக்கு மற்றொரு இனிப்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். அவர் தனது வீடியோ செய்தியில், ‘வரும் ஜூலை 1ம் தேதி முதல் பஞ்சாப்பில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மாதம் இலவசமாக 300 யூனிட் மின்சாரம் வழங்கப்படும். இது 2 மாதங்களுக்கு 600 யூனிட் என கணக்கிடப்படும்,’ என அறிவித்தார். முன்னதாக, இது தொடர்பான விளம்பரங்கள் முன்னணி பத்திரிகைகளிலும் அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்தது.ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தின் போது, 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது இந்த தேர்தல் வாக்குறுதியை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றி உள்ளது. * பஞ்சாப்பில் 2 மாதத்திற்கு ஒருமுறை மின்சார பயன்பாடு கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், 2 மாதத்திற்கு 600 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். * ஒருவேளை, 2 மாதத்தில் 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால், பயன்படுத்திய முழு மின்சாரத்துக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் இலவச மின்சார சலுகையை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இந்த நிபந்தனை விதிக்கப்பட்டு இருப்பதாக அரசு அதிகாரிகள் கூறி உள்ளனர்.* மேலும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 600 யூனிட்டுக்கு மேல் செலவழிக்கும் மின்சாரத்திற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். * இந்த இலவச திட்டத்தால் 80 சதவீதம் பேர், அதாவது 61 லட்சம் குடும்பங்கள் பலன் பெறும் என பஞ்சாப் அரசு கூறி உள்ளது. இதற்காக அரசுக்கு ரூ.5,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும், இந்த சுமையை அரசே ஏற்கும் என்றும் உறுதி தரப்பட்டுள்ளது. * இலவச மின்சாரம் வழங்குவதால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்தவோ, தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணத்தை உயர்த்தவோ மாட்டோம் என்றும் முதல்வர் பகவந்த் மான் கூறி உள்ளார். இமாச்சல், குஜராத்துக்கு குறிடெல்லி, பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி, அடுத்ததாக இமாச்சல், குஜராத் மாநிலங்களுக்கு குறிவைத்துள்ளது. விரைவில் இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநில மக்களை கவரவே, பஞ்சாப்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி வேகமாக நிறைவேற்றி வருகிறது என கருதப்படுகிறது.குருத்வாராவுக்கு போதையில் சென்ற மான்பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், எம்பி.யாக தேர்வு செய்யப்பட்ட ஆரம்பக் காலத்தில் பெரும் குடிகாரராக இருந்தார். பின்னர், அவர் திருந்தி விட்டார் என்று கூறப்பட்டது. பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அவர்  அறிவிக்கப்பட்ட போது, இந்த சர்ச்சை கிளப்பப்பட்டது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி பஞ்சாப்பில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, குருத்வாராவுக்குள் குடித்து விட்டு மான் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிரோமணி குருத்வாரா பிரபந்த் கமிட்டி அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், போதையில் வந்ததற்காக மான் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பஞ்சாப் டிஜிபியிடம் பஞ்சாப் பாஜ.வை சேர்ந்த தலைவர்களில் ஒருவரான தஜிந்தர் பால் சிங் பக்கா நேற்று புகார் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.