விஜயநகர்,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக பாஜக மாநில செயற்குழு கூட்டம் ஒசப்பேட்டேவில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்கிறார்.
மந்திரி மீது 40 சதவீதம் புகார் கூறிய காண்டிராக்டர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு ஈசுவரப்பாவே காரணம் என்று அவர் ‘வாட்ஸ்-அப்’ மற்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஈசுவரப்பா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது.
இந்த சம்பவம், கர்நாடக பாஜகவை இக்கட்டில் சிக்க வைத்துள்ளது. கர்நாடக அரசில் 40 சதவீத கமிஷன் வாங்குவதாக காண்டிராக்டர்கள் சங்கமும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் கர்நாடக பாஜக மாநில செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேவில் தொடங்குகிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மேலிட பொறுப்பாளர் அருண்சிங், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட முன்னணி தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் மந்திரிசபையை மாற்றி அமைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியை பலப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. 40 சதவீத கமிஷன் விவகாரத்தால் கட்சிக்கு ஆகும் பாதிப்பு குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. மந்திரிசபை மாற்றத்தின்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மந்திரிகள் அனைவரையும் நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தையொட்டி ஒசப்பேட்டேவில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த செயற்குழு கூட்டம் இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. தலைவர்கள் தங்குவதற்கு வசதியாக அங்குள்ள விடுதிகளில் 300 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 30-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.