புதுடில்லி-‘மத்திய அரசு, பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக, கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
மத்தியில் 55 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த காங்கிரசால் செயல்படுத்த முடியாத பல திட்டங்களையும், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு நிறைவேற்றியுள்ளது’ என, அக்கட்சி பெருமிதத்துடன் கூறியுள்ளது.
பா.ஜ., தன் 22ம் ஆண்டு விழாவை ௬ம் தேதி கொண்டாடியது. இதையொட்டி ௨௦ம் தேதி வரையிலான இரண்டு வார காலத்தை, சமூக நீதியை உறுதி செய்யும் நாட்களாக அனுசரிக்க, பா.ஜ.,வினருக்கு கட்சியின் தேசிய தலைவர் நட்டா உத்தரவிட்டார்.
‘சமூக நீதியை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்’ என, பிரதமர் மோடியும் பா.ஜ., – எம்.பி.,க்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் பற்றி, பா.ஜ., செய்தி தொடர் பாளர் கவுரவ் பாட்டியா நேற்று கூறியதாவது:மத்தியில், ௫௫ ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த காங்கிரஸ், பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக செயல்படுத்திய திட்டங்களை விட, கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது
.விவசாயம் அல்லாத சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, ௧௦ லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் ‘முத்ரா’ திட்டத்தின், 10 கோடிக்கும் அதிகமான பயனாளியரில், ௫௦ சதவீதத்துக்கும் அதிகமானோர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இது, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்திஉள்ளதுடன், அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி தந்துள்ளது.
தொழில் துவங்க, 1 கோடி ரூபாய் வரை கடன் வழங்க வகை செய்யும் ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்தால், வேலை தேடுவோர் என்ற நிலையில் இருந்து, வேலை வழங்குபவர் என்ற நிலைக்கு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத்தவர் உயர்ந்துள்ளனர். இவர்களுடைய குழந்தைகளின் கல்விக்காக, மோடி அரசின் முதல் பட்ஜெட்டில் ௧,௧௦௦ கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இது, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ௬,௦௦௦ கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வாழும் ௩௬ ஆயிரத்து ௪௨௮ கிராமங்கள், ௭,௩௦௦ கோடி ரூபாய் செலவில் முன் மாதிரி கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில், அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்தி, அவற்றை ‘லட்சிய மாவட்டங்களாக’ மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
எஸ்.சி., – எஸ்.டி., பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்க, ‘ஏகலைவா மாதிரி பள்ளிகள்’ உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாடு முழுதும், ௪௫௨ ஏகலைவா பள்ளிகள் கட்டப்பட உள்ளன; ௨௧௧ ஏகலைவா பள்ளிகள் நவீனப்படுத்தப்பட உள்ளன. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியினரை, இதற்கு முன் இருந்த அரசுகள் சிறிதும் மதிக்கவில்லை.
ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியினரை பாராட்டி கவுரவித்துள்ளது.தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் போதுமானது என, இதற்கு முன்பிருந்த அரசுகள் கருதின. ஆனால், பா.ஜ., அரசு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததுடன், அவர்களை நாட்டின் தேசிய நீரோட்டத்தில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.