தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் முருங்கை மரம் ஏறி வேதாளத்தைச் சுமந்தது போல, காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருமுறை பிரசாந்த் கிஷோரை அழைத்துப் பேசியிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மீட்சி பெறச் செய்யும் தேவதூதராக அவரையே நம்பியிருக்கிறது. ஏப்ரல் 16-ம் தேதி சோனியா காந்தியின் 10, ஜன்பத் இல்லத்துக்கு பிரசாந்த் கிஷோர் வந்தபோது அவருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. ராகுல் காந்தியும் அருகே இருக்க, ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 10 பேர் முன்னிலையில் விரிவான பவர் பாயின்ட் பிரசன்டேஷன் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் பி.கே. 2024 நாடாளுமன்றத் தேர்தலை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அதில் விவரித்திருந்தார்.
சோனியாவும் ராகுலும் உடனடியாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளனர். பி.கே கொடுத்த யோசனைகளை அந்தக் குழு ஆராய்ந்து ஒரே வாரத்தில் அறிக்கை கொடுக்கும். அதைத் தொடர்ந்து, அவற்றை எப்படி செயல்படுத்துவது என்று ஆலோசிக்கப்படும்.
காங்கிரஸ் கட்சிக்கு வெறுமனே தேர்தல் ஆலோசகராக இல்லாமல், கட்சியிலேயே சேர்ந்துவிடுமாறு பிரசாந்த் கிஷோரை சோனியா காந்தி கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. பிரசாந்தும் இதில் ஆர்வமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
காங்கிரஸின் தற்போதைய பலவீனங்கள் என்னென்ன என்று நீண்ட பட்டியல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் பி.கே. கூடவே, அவற்றைச் சரிசெய்யும் வழிகளையும் சொல்லியிருக்கிறார். மூத்த தலைவர்களையும், இப்போது பொறுப்புகளில் இருப்பவர்களையும் பகைத்துக்கொள்ளாமல் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பது சோனியாவின் விருப்பம். ஆனால், அதிரடி மாற்றங்களே நல்ல ரிசல்ட்டைக் கொடுக்கும் என்கிறார் பி.கே. கூடவே, கட்சி அமைப்புக்குள் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தனக்கு முழு சுதந்திரத்தையும் கேட்கிறார். இதை சோனியா குடும்பமும் மூத்த தலைவர்களும் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பதைப் பொறுத்தே பி.கே-வின் காங்கிரஸ் என்ட்ரி அமையும்.
இந்தியா முழுக்க 370 எம்.பி தொகுதிகளில் காங்கிரஸ் முழு கவனம் செலுத்தி இப்போது முதலே வேலை பார்க்க வேண்டும் என்பது பி.கே கொடுக்கும் திட்டம். 2024 தேர்தலில் அதிக இடங்களில் ஜெயிப்பதற்கு அவர் சொல்லும் ஐடியாக்கள் நிறைய! பா.ஜ.க செல்வாக்கு இல்லாத பகுதிகளில் காங்கிரஸ் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பா.ஜ.க தன் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுத் தரும் இடங்களில் காங்கிரஸ் களமிறங்க வேண்டும். இப்படி பா.ஜ.க-வுடன் நேரடி மோதல் இல்லாத இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டு ஜெயிப்பதற்கான வழிகளை இப்போது முதலே கண்டறிய வேண்டும் என்பன உள்ளிட்ட யோசனைகளை அவர் கொடுத்திருக்கிறார்.
இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 22 ஆண்டுகளாக அங்கு பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான அங்கு இந்த சட்டமன்றத் தேர்தலை முழு வீரியத்துடன் எதிர்கொள்ள ராகுல் காந்தி நினைக்கிறார். பஞ்சாப்பைத் தொடர்ந்து குஜராத்திலும் ஆம் ஆத்மி கட்சி கால் பதித்திருக்கிறது. காங்கிரஸ் பெரும் நம்பிக்கையுடன் படேல் இனத் தலைவரான ஹர்திக் படேலைக் கட்சியில் சேர்த்தது. மாநில செயல் தலைவராக இருக்கும் அவர், குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் தன்னைச் செயல்படவிடாமல் தடுப்பதாக வெளிப்படையாகப் பேட்டி கொடுத்திருக்கிறார். இந்தப் பலவீனங்களைத் தாண்டி, பி.கே அமைக்கும் வியூகத்தால் காங்கிரஸ் கரை சேருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலை மம்தா பானர்ஜிக்கு வென்று கொடுத்தது பிரசாந்த் கிஷோரின் வியூகம். அந்தப் பெருமிதத்துடன், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராகுல் மற்றும் பிரியங்காவை பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். அப்போதே அவர் காங்கிரஸில் இணைவதற்கு ஆர்வம் காட்டினார். அப்போது பஞ்சாப் காங்கிரஸில் உச்சகட்ட குழப்பம் நிலவியது. உ.பி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதும் காங்கிரஸுக்கு புதிராக இருந்தது. அந்தச் சூழலில் பி.கே காங்கிரஸில் சேர்ந்திருந்தால், ஓரளவு சேதாரத்தை அந்தக் கட்சி தவிர்த்திருக்கும். ஆனால், மூத்த தலைவர்கள் சிலர் பி.கே என்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அது நடக்காமலே போய்விட்டது.
அதன்பிறகு ராகுலைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார் பி.கே. “கடந்த 10 ஆண்டுகளில் 90 சதவிகிதத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோற்றிருக்கிறது. அதன் தலைமை குறிப்பிட்ட ஒரு குடும்பத்தின் தெய்வீக உரிமை இல்லை” என்று பி.கே சொன்னதற்கு காங்கிரஸ் தலைவர்கள் அவரைக் குதறி எடுத்தார்கள்.
காங்கிரஸில் நுழையும் முயற்சி தோல்வியில் முடிந்தபிறகு மம்தாவை தேசியத் தலைவராக்கும் முயற்சியில் பி.கே இறங்கினார். அசாம் மற்றும் திரிபுராவில் காங்கிரஸ் தலைவர்கள் பலரை மம்தா கட்சிக்கு இழுத்தார். மேகாலயாவில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கும்பலாக திரிணாமுல் காங்கிரஸில் இணைய, அங்கு மம்தா கட்சி திடீரென பிரதான எதிர்க்கட்சி ஆனது. கோவா காங்கிரஸ் தலைவர்கள் பலரை மம்தா கட்சிக்கு இழுத்து, அங்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்தார். மம்தா கட்சிக்கும் தோல்வி கிடைத்தது. இவர்கள் ஓட்டுகளைப் பிரித்ததால் காங்கிரஸும் தோற்றது.
இப்படிப்பட்ட சூழலில்தான் பிரசாந்த்துக்கு காங்கிரஸ் மீது மீண்டும் பாசம் வந்திருக்கிறது. “வெளியில் சோனியா குடும்பத்தை பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சனம் செய்தாலும், ராகுலுடன் அவருக்கு இருந்த நெருக்கம் குறையவே இல்லை. இருவருமே தொடர்ந்து பேசி வந்தார்கள். பா.ஜ.க-வை எதிர்க்க காங்கிரஸ் வலிமையாக இருக்க வேண்டும் என்பது பிரசாந்தின் கருத்து. ராகுலுக்கும் அதே கருத்து இருக்கிறது. அதுதான் இருவரையும் இணைத்திருக்கிறது” என்கிறார்கள் காங்கிரஸ் இளம் தலைவர்கள் சிலர்.
அரசியல் வியூகங்களை வகுப்பதில் பி.கே திறமைசாலி என்றாலும், நேரடி அரசியலில் அவருக்கு பெரிய வெற்றி கிடையாது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியில் சேர்ந்து, பிறகு அங்கிருந்து நீக்கப்பட்டவர்தான் பி.கே. காங்கிரஸ் அவருக்கு எப்படிப்பட்ட வரலாற்றை வழங்கப் போகிறது என்பது தெரியவில்லை.