டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உடன் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
5 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மூத்த தலைவர்களை சந்தித்து தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக டெல்லி ஜன்பத்தில் உள்ள தனது இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி திடீரென அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், திக்விஜய் சிங், அஜய் மக்கான், அம்பிகா சோனி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள குஜராத் உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என தகவல்கள் வெளியான நிலையில் இன்றைய கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM