ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு பிரித்தானிய வாக்காளர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளார்கள்.
நேற்றிரவு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், கிட்டத்தட்ட இரண்டு பேரில் ஒருவர் புலம்பெயர்வோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் போரிஸ் ஜான்சனின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், லேபர் கட்சித் தலைமை இந்த திட்டத்தை எதிர்த்துள்ள நிலையில், அக்கட்சியின் வாக்காளர்களே இந்த திட்டத்தை ஆதரித்துள்ளதுதான்.
தொண்டு நிறுவனங்கள் இந்த திட்டத்தை எதிர்க்க, ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஏஜன்சியின் துணை இணை ஆணையரான Gillian Triggs, பிரித்தானியாவின் இந்த திட்டம் ஏற்றுக்கொள்ள இயலாதது என்றும், அது சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜான்சனோ, ருவாண்டா உலகிலுள்ள பாதுகாப்பான நாடுகளுள் ஒன்று என்று வலியுறுத்த, பிரித்தானிய உள்துறை செயலரான பிரீத்தி பட்டேல், பிரித்தானியாவுக்கு வரும் சட்ட விரோத புலம்பெயர்வோரை ருவாண்டாவுக்கு அனுப்புவது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த திட்டத்திற்காக ஆரம்ப கட்டத்தில் சுமார் 120 மில்லியன் பவுண்டுகள் செலவு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உள்துறை அலுவலகமோ பிரித்தானிய புலம்பெயர்தல் அமைப்புக்கு, ஆண்டொன்றிற்கு மக்களின் வரிப்பணம், 1.5 பில்லியன் பவுண்டுகள் செலவாவதாக தெரிவித்துள்ளது.
ஆக, புலம்பெயர்வோரை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கும் திட்டம் குறித்து 1,000க்கும் அதிகமாக வயது வந்த பிரித்தானியர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டபோது, 47 சதவிகித வாக்காளர்கள் அத்திட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள நிலையில், 26 சதவிகிதம் பேர் மட்டுமே, அதை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
இத்திட்டம் குறித்து அறியாதவர்களுக்கு, அதாவது, பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சட்ட விரோதமாக நுழைவோரின் புகலிடக் கோரிக்கைகளை பிரித்தானிய அரசு பரிசீலிக்கும்வரை, அல்லது பரிசீலிக்கும் காலகட்டத்தில், அந்த புலம்பெயர்வோர் ருவாண்டாவில் தங்கவைக்கப்படும் வகையில், அவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்க பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் எண்ணம் கொண்ட அகதிகளுக்கு இந்த ஒப்பந்தம் பயத்தை ஏற்படுத்தும் என்பதால், அவர்கள் சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையத் தயங்குவார்கள் என பிரித்தானிய அதிகாரிகள் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.