பொன்னமராவதி அருகே ரெட்டியபட்டி கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா, பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, விராலிமலை அன்னவாசல் இலுப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடித் திருவிழா நடைபெறும். ஜாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி நடைபெறும் இந்த மீன்பிடித் திருவிழா கொரோனா பெறுந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள பஞ்சனங்கண்மாயில் பொன்னமராவதி, ஆலவயல், அம்மன்குறிச்சி, நகரப்பட்டி, மூலங்குடி, கண்டியானத்தம், அரசமலை, காரையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் குவிந்தனர். பின்னர், ஊர் முக்கியஸ்தர்கள் சாமி கும்பிட்டு வெள்ளை துண்டை அசைத்து மீன்பிடி விழாவை தொடங்கி வைத்தனர். இதையடுத்து அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடிக்கத் தொடங்கினர்.
அதில், ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, அயிரை, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. இதையடுத்து மீன்பிடித் திருவிழாவில் பிடிக்கப்பட்ட மீன்களை வீட்டிற்கு கொண்டு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் சமைத்து உண்பது ஐதிகமாக உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM