போராட்டத்தை ஒடுக்கும் முடிவை கைவிட்டது இலங்கை அரசு| Dinamalar

கொழும்பு, : இலங்கையில், அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள போராட்டக்காரர்களை அகற்ற அனுப்பிய போலீஸ் வாகனங்கள் திடீரென திரும்பப் பெறப்பட்டதால், மிகப் பெரிய மோதல் தவிர்க்கப்பட்டது.

விலைவாசி உயர்வுநம் அண்டை நாடான இலங்கையில் அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுஉள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளதால் கொதித்தெழுந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிபர் அலுவலகம் முன், ஒரு வாரமாக நடந்து வரும் இப்போராட்டத்தில் கட்சி சார்பற்ற ஏராளமானோர் கலந்து கொண்டுஉள்ளனர்.அவர்களுக்கு திரைப்பட கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதைப் பார்த்த இலங்கை அரசு, போராட்டக்காரர்களை களத்தில் இருந்து அப்புறப்படுத்த ஏராளமான போலீஸ் வாகனங்களை அனுப்பியது.

எதிர்பார்ப்பு

இதையடுத்து அங்கே பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனஎதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திடீரென மேலிட உத்தரவு வந்ததை அடுத்து, போலீஸ் வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டன. இதனால் மிகப் பெரிய மோதல் தவிர்க்கப்பட்டது. இலங்கை அரசின் இந்த திடீர் மாற்றத்தின் பின்னணியில் அந்நாட்டின் வழக்கறிஞர்கள் சங்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

‘ஜனநாயக முறையில் அமைதியாக போராடுவோரை ஒடுக்க நினைத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரும்’ என வழக்கறிஞர்கள் சங்கம் விடுத்த எச்சரிக்கையால், போலீஸ் வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.