மதுரை சித்திரைத் திருவிழா | பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுக்கு இடையே கோலாகலமாக நடந்தது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். லட்சக்கணக்கான மக்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகை ஆற்றில் அழகருக்கு முடியிறக்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் கருப்பசாமி வேடமிட்டு திரிபந்தம் ஏந்தி ஆட்டம் ஆடி நேர்த்திக் கடன் செலுத்தினர். அழகருக்கு சொம்பில் சர்க்கரை நிரப்பி தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி பக்தர்கள் மீது பீய்ச்சி அடிக்கும் நேர்த்திகடனும் நிறைவேற்றப்பட்டது.

அழகர் எந்த வண்ண வஸ்திரம் உடுத்தி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் வளம் இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்த ஆண்டு கள்ளழகர் பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய வைபவமான மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (ஏப்.14) விமரிசையாக நடந்தது. திருவிழாவின் 11-ம் நாளான நேற்று (ஏப்.15) தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று (ஏப்.16) மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

கொடியேற்றம்.. கோலாகலம்.. மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் 10 நாள் சித்திரைத் திருவிழா கடந்த 12-ம் தேதி தொடங்கியது. இதற்காக சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து கண்டாங்கி பட்டு உடுத்தி,கையில் சங்கு, சக்கரம், நேரிக்கம்பு, வளைத்தடியுடன் தந்தப் பல்லக்கில் புறப்பட்டார்.

பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 7 மணியளவில் மதுரை மூன்றுமாவடிக்கு வந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்துச் செல்லும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் கள்ளழகரை தரிசித்தனர். தொடர்ந்து புதூர், தல்லாகுளம் பகுதிகளில் உள்ள பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் இரவு சுமார் 9.30 மணியளவில் தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்தார்.

சனிக்கிழமை அதிகாலை 12 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, பட்டு வஸ்திரங்களை அணிந்து அருள் பாலித்தார். பின்னர் அங்கிருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர், அதிகாலை 2.30 மணியளவில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் வழியாக வைகை ஆற்றை அடைந்த பின்பு, இன்று காலை சுமார் 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்கினார்.

அதைத் தொடர்ந்து 7 மணிக்கு மேல் வைகை ஆற்றில் இருந்து புறப்படும் கள்ளழகர் ராமராயர் மண்டபம், மதிச்சியம், அண்ணா நகர் பகுதிகளில் உள்ள மண்டகப் படிகளிலும் எழுந்தருளிவிட்டு இரவு வண்டியூரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலை சென்றடைகிறார்.

நாளை (ஏப்.17) 11 மணிக்கு வைகை ஆற்றுக்குள் இருக்கும் தேனூர் மண்டகப்படியில் எழுந்தருளி, மாண்டூக முனீவருக்கு சாபம் தீர்க்கும் காட்சி நடக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.