சென்னை: மீன் பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில், இந்தக் காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15ம் தேதி நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தத் தடையானது ஜுன் 14ம் தேதி வரை அமலில் இருக்கும்.
தடைக் காலம் என்பதால் படகுகளை சீரமைக்கும் பணியை மீனவர்கள் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய தமிழகத்தின் 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு நடப்பாண்டு மீன் பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்படும் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வினை கருத்தில் கொண்டு மீனவர்களுக்குக் கூடுதலாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மீனவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “மீன் பிடித் தடைக்காலம் தொடங்கிவிட்டது. அடுத்த 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது.
மீனவர்களுக்கான நிவாரண தொகையை ரூ.10,000/- ஆக உயர்த்தி, தாமதமின்றி வழங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் கூறப்பட்டுள்ளது.