மும்பை புறநகர் பகுதியான பயந்தர் பதக் ரோட்டில் வசித்து வருபவர் நிலேஷ்(46). இவரின் மனைவி நிர்மலா(40). நிர்மலா தனது கணவருக்கு காலை உணவாக காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்திருந்தார். அதனை நிர்மலா தனது கணவருக்கு பரிமாறிய போது அதனை சாப்பிட்டு பார்த்த நிலேஷ் கடும் கோபம் அடைந்தார். சாப்பாட்டில் அளவுக்கு அதிகமாக உப்பு போடப்பட்டு இருந்தது. இது குறித்து நிலேஷ் தனது மனைவியிடம் கேட்டு வாக்குவாதம் செய்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபத்தில் வீட்டில் கிடந்த துணியை எடுத்து நிலேஷ் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து நிர்மலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சட்டப்பிரிவு 302 -ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கொலை செய்த நிலேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு வேறு எதாவது காரணம் உண்டா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பை அருகே தானேயில் 72 வயது முதியவர் ஒருவர் தனது மருமகள் டீயுடன் காலை உணவு கொடுக்கவில்லை என்ற கோபத்தில் தனது மருமகளை துப்பாக்கியால் சுட்டார். இது தொடர்பான அதிர்ச்சி அடங்குவதற்குள் புதிதாக இதே உணவுப்பிரச்னைக்காக மற்றொரு பெண் கொலை செய்யப்பட்டு இருப்பது மும்பை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.