ஆக்ரா:
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் பீம்நகர் பகுதியில், அம்பேத்காரின் 131வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் கலந்துகொண்டார். அவர் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அந்த பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது. இதில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், நிகழ்ச்சி நடந்த பகுதியில் இருள் சூழ்ந்தது. விழாவில் கலந்து கொண்டவர்கள் அச்சமடைந்தனர்.
இந்நிலையில் வேகமாக காற்று வீசியதில் விழாவில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பம் ஒன்று சரிந்து மேடையருகே விழுந்தது. அதில் இணைக்கப்பட்டு இருந்த பல மின் விளக்குகளும் வெடித்து சிதறின. இந்த விபத்தில் இருந்து மத்திய மந்திரி மேக்வால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். படுகாயங்களுடன் கிடந்த நபர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.