கோயம்புத்தூர் – பாலக்காடு ரயில் தடத்தில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் போத்தனூரில் இருந்து வாளையாறு வரை ரயில் இன்ஜினில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆய்வின் முடிவில் யானைகளின் உயிரைக்காப்பதன் அவசியத்தை உணர்ந்து வெளிநாட்டில் இருந்து யானை நிபுணர்களை அழைத்து வந்து இதற்கான ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
உயிரியியலில் Keystone species என்று அழைக்கப்படக்கூடிய ஆதார உயிரினங்களில் ஒன்று யானை. யானையின் வாழ்வு காட்டுக்கும் நமது உயிர்ச்சூழலுக்கும் இன்றியமையாதது என்கிற நிலையில் ரயில் மோதி பேருயிரான யானைகள் இறப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காட்டுப் பகுதிக்குள் செல்லும் ரயில் தடங்களில்தான் இந்த விபத்து நடைபெறுகிறது. அப்படியாக கோயம்புத்தூர் – பாலக்காடு ரயில் தடத்தில் கடந்த ஆண்டு 3 யானைகள் ரயில் மோதி உயிரிழந்திருக்கின்றன. ஒரே ஆண்டில் மூன்று யானைகள் இறப்பது மிகப்பெரும் எண்ணிக்கை எனச் சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ரயில் போக்குவரத்தை நாம் தவிர்க்கவே முடியாது என்கிற நிலையில் யானைகள் மோதி இறக்கும் விபத்தை எவ்விதம் தடுக்கலாம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜனிடம் கேட்டோம்…
“ரயில் போக்குவரத்து இன்றியமையாதது என்றாலும், காட்டுயிர்களின் வாழ்வையும் நாம் கருத்தில்கொண்டே தீர வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் யானைகள் ரயிலில் மோதி இறப்பது தொடர்கதையாகி வருகிறது. ரயிலில் மோதி இறப்பதைப்போல் மின் கம்பிகளில் பட்டு மின்சாரம் தாக்கி இறப்பதும் நடக்கிறது. இதைத் தடுக்க புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிவது தேவைதான் என்றாலும் எளிதில் நடைமுறைப்படுத்தக்கூடிய யோசனைகள் நிறையவே இருக்கின்றன.
யானைகள் உணவு மற்றும் நீர்த்தேவைக்காகக் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு வரை வலசை செல்வது அதன் இயல்பு. யானைகள் வலசை செல்லும் காட்டுப்பாதையில் ரயில்கள் வேகமாகச் சென்று யானை மீது மோதுகையில் அப்பேருயிர் இறக்கிறது. உலகின் பல நாடுகளில் யானைகள் வலசை போகும் பாதையில் ரயில் தடத்தை சுரங்கப்பாதைப் போல அமைத்துவிடுவார்கள். ரயில்கள் சுரங்கப்பாதைக்குள் கீழே செல்ல மேலே யானைகள் வலசை செல்லும். இதன் மூலம் யானைகள் உயிரிழப்பு தடுக்கப்படும்.
யானைகளின் உயிரிழப்பை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் இந்த விபத்து அதிகம் நடக்கிறது. எந்தத் தண்டவாளத்தில் யானைகள் அதிகம் இறக்கின்றன என்பதைக் கண்டறிந்து அந்தத் தண்டவாளத்தை குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். எந்த இடத்தில் யானைகளின் நடமாட்டம் இருக்கிறதோ அப்பகுதிகளில், ரயில் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். காட்டுப் பகுதியில் இரவு நேரங்களில் மட்டும் மணிக்கு 30 கிமீ வேகத்தில் ரயிலை இயக்க உத்தரவிட வேண்டும்.
காட்டுப்பகுதிக்குள் செல்கையில் ஒலி எழுப்பிக்கொண்டே செல்வதும் காட்டுயிர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும். இன்றைக்கு அறிவியல் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவைக் கொண்டு காட்டுயிர்கள் தண்டவாளத்தைக் கடக்க நேர்கையில் ரயிலின் வேகம் தானாகவே குறைந்து நிறுத்துவதைப் போலான தொழில்நுட்பத்துக்கான சாத்தியங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த இன்னும் சில காலம் ஆகும்.
எனவே, மேற்சொன்ன எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். காட்டுயிர்கள் மீதான சரியான பார்வை உண்டாக வேண்டும். காட்டுயிர்களின் வாழ்வைப் பொருட்படுத்தினாலே அவற்றின் உயிரிழப்பைத் தடுக்கலாம்” என்கிறார் சுந்தரராஜன்.
“இந்தியாவின் அடையாளமாக மாறியிருக்கும் யானைகளை ரயில் விபத்துகளில் பலிகடா ஆக்குவது நாகரிகமான சமூகத்துக்கு அழகானது அல்ல. இவ்வளவுக்கும் சில பல ஆண்டுகளாக யானைகள் இறக்கும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. தொடர்ந்து உயர் நீதிமன்றம் கறார் காட்டி வருவதால்தான் யானைகள் இறப்பு விவகாரம் பேசு பொருளாகியுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும், அதுவும் உடனடியாக வேண்டும்” என்று எச்சரிக்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள்.