வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ் : உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ‘மூன்றாம் உலகப் போர் துவங்கி விட்டது’ என, ரஷ்ய அரசு ‘டிவி’யில் அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். உக்ரைனின் தெற்கில் உள்ள கருங்கடல் பகுதியில், நேற்று முன்தினம் ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான, ‘மோஸ்க்வா’ என்ற போர்க்கப்பலை, ஏவுகணைகளை வீசி உக்ரைன் படையினர் தகர்த்தனர். எனினும், தீ விபத்து ஏற்பட்டதால் தான், அந்த கப்பல் சேதமடைந்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில், ‘ரஷ்யா – 1’ என்ற அரசு தரப்பு ‘டிவி’யில், ‘மூன்றாம் உலகப் போர் துவங்கி விட்டது’ என அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் நேரலையில் பேசிய தொகுப்பாளர் ஓல்கா ஸ்கபயேவா கூறியதாவது: ரஷ்யாவின் மோஸ்க்வா போர்க்கப்பல் தகர்க்கப்பட்டுள்ளது. இது, இரு நாடுகளுக்கு இடையில் நடந்து வரும் போரை தீவிரமடையச் செய்துள்ளது. மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது என்றும் நாம் கூறலாம்.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான சண்டை, வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும், ‘நேட்டோ’ கூட்டமைப்புக்கு எதிரான போராகவே உள்ளது. இதை நாம் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், மற்றொரு ரஷ்ய அரசு ‘டிவி’யில், ‘மேற்கத்திய நாடுகள் உத்தரவுப்படி, உக்ரைன் படையினர் ரஷ்யா மீது கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்’ என கூறப்பட்டது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து வெளியேறிய ரஷ்ய படைகள், மீண்டும் ஏவுகணைகளை வீசி கீவில் தாக்குதலை நடத்த முடிவு செய்துள்ளன. ரஷ்யாவில் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisement