ராஜஸ்தானில் குளிர்பானம் குடித்து 7 குழந்தைகள் பலி- தொற்று நோயால் இறந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் பதில்

ராஜஸ்தானில் சிரோஹி கிராமத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வியாழக்கிழமை அக்கிராமத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்களை குடித்ததால் ஏழு குழந்தைகளும் மர்ம நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்த குழந்தைகளின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, உள்ளூர் விற்பனையாளர்கள் பிளாஸ்டிக் கவர்களில் விற்கும் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை குழந்தைகள் முன்னாள் இரவு குடித்ததை அடுத்து மறுநாள் காலையில் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தொகுதி முதல் மாநில அளவிலான மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து இறப்புக்கான சரியான காரணத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தில் உள்ள பல்வேறு கடைகளில் விற்கப்பட்ட குளிர் பானங்களின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதே வேளையில், குளிர்பானம் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பதலிளித்த ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரசாதி லால் மீனா கூறியதாவது:- இந்த சம்பவத்தின் மருத்துவ விசாரணையில் குழந்தைகளின் மரணங்கள் வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டதாகவும், குளிர் பானங்களை உட்கொண்டதால் அல்ல என்று தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசினேன். கிராமத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூரில் இருந்து குழுக்கள் அங்கு வந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்..
மனைவி தொல்லையால் காரை எரித்த பா.ஜனதா நிர்வாகி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.