ரூ.14 கோடி மதிப்புள்ள பரிசுகளை தன்வசம் வைத்துக்கொண்ட இம்ரான் கான்

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் சமீபத்தில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், தனது பதவிக்காலத்தில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை தன் வசம் வைத்துக்கொண்டுள்ளார். 
இம்ரான் கானின் மூன்றரை ஆண்டு பதவிக்காலத்தின்போது அவருக்கு பல்வேறு உலக தலைவர்கள் கொடுத்த 58 பரிசுப்பொருட்களை தக்கவைத்திருப்பதாகவும்,  அரசுக்கு மிகக் குறைவான தொகையை செலுத்தியோ அல்லது பணம் செலுத்தாமலோ தக்கவைத்துக் கொண்டார் என்றும் தி நியூஸ் இன்டர்நேசனல் செய்தி வெளியிட்டுள்ளது. 
இம்ரான் கான் ரூ.14 கோடி மதிப்புள்ள பரிசுகளுக்காக ரூ. 3.8 கோடி செலுத்தினார் மற்றும் ரூ.800,200 மதிப்புள்ள மற்ற பரிசுகள் எந்தப் பணமும் செலுத்தாமல் தக்கவைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் பாகிஸ்தானின் பிரதமராகி, அரசாங்க கருவூலத்தின் சுமையை குறைக்க பல சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்திய இம்ரான் கான், துபாயில் ரூ.14 கோடி மதிப்புள்ள பரிசுகளை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
துபாயில் ரூ.14 கோடி மதிப்புள்ள வைர நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பரிசுகளை விற்று, தேசிய கருவூலத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் சட்ட விதிகளின்படி, அரசு உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் மற்றொரு நாட்டின் தலைவரிடமிருந்து பெற்ற பரிசு கருவூலத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது. பரிசைத் தன் வசம் வைத்துக்கொள்ள விரும்பினால், குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.  பரிசுகளை இம்ரான் கான் தக்கவைத்திருந்த நேரத்தில் அந்த தொகை பரிசுத்தொகையின் மதிப்பில் 20 சதவீதமாக இருந்தது. 
அதன்பின்னர், பரிசுகளை தக்கவைக்க 50 சதவீதம் செலுத்த வேண்டும் என்று டிசம்பர் 2018-ல் விதிகள் திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.