புதுடெல்லி: சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இந்திய ராணுவ வீரர்களுக்கு சீனா மொழி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டு இந்திய, சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் உருவானது. பின்னர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின், சில இடங்களில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டாலும், இன்னும் பல இடங்களில் இரு நாட்டு எல்லையிலும் வீரர்கள் குவிக்கப்பட்டே உள்ளனர்.இதனால், எல்லையில் படையை பலப்படுத்தும் அதே சமயம், சீனா வீரர்களுடன் அசாதாரண சூழலில் மொழிப்பிரச்னையை தீர்க்கவும் ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக சீனாவில் பெரும்பான்மையாக பேசப்படும் மாண்டரின் மொழி இந்திய ராணுவ வீரர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் சுமார் 20 அதிகாரிகள் குஜராத்தின் காந்தி நகரில் உள்ள ராஷ்டிரிய ரக்ஷா பல்கலையில் சீன மொழி டிப்ளமோ மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர். இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது பாகிஸ்தானை விட சீன எல்லையில் அதிக பிரச்னைகள் நிலவுகின்றன. பாகிஸ்தானை பொறுத்த வரையில் மொழி, கலாச்சார வேறுபாடுகள் எதுவுமில்லை. ஆனால் சீனா முற்றிலும் மாறுபட்டது. எல்லையில் அசாதாரண சூழலில் சீன மொழி தெரிந்திருப்பதன் மூலம் நிலைமையை மேலும் சிறப்பாக கையாள முடியும். எனவே, வீரர்களுக்கு சீன மொழி பயிற்றுவிக்கப்படுகிறது’’ என்றனர். வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை ராணுவ தளபதி நரவானே தலைமையில் ராணுவ கமாண்டர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதில் சீன எல்லை விவகாரம் மற்றும் வீரர்களுக்கு சீன மொழி பயிற்றுவிக்கும் திட்டத்தின் நிலை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.