விடுமுறை கொண்டாட்டம்: கன்னியாகுமரி பத்மநாபபுரம் அரண்மனையில் குவியும் சுற்றுலாப்பயணிகள்

தொடர் விடுமுறையால் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையை காண குவிந்துள்ள நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் அரண்மனையின் அழகை பார்வையிட்டு ரசித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் பழமை வாய்ந்த பத்மநாபபுரம் அரண்மனையும் ஒன்று. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்ற மன்னர், கேரளா கட்டடக்கலைகளுக்கு எடுத்துக்காட்டாக இந்த அரண்மனையை வடிவமைத்தார்.  தற்போது இந்த அரண்மனையானது முழுக்க முழுக்க கேரளா தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
image
இந்த அரண்மனையை நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகைதந்து அரண்மனையை பார்வையிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தற்போது சித்திரை விஷூ, பெரிய வெள்ளி, ஈஸ்டர் பண்டிகைகளை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை தினம் என்பதால் அரண்மனையைக்காண சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
image 
அரண்மனையில் குவிந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் அரண்மனையின் கட்டடக்கலை நுட்பங்களை கண்டுகளித்து, மன்னர் காலத்தில் அவர்கள் பயன்படுத்தி வந்த வாள், கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் பார்வையிட்டுச் செல்கின்றனர். அதேபோல் அரண்மனையின் உள்ளே அமைந்துள்ள மந்திரசாலை, தாய்க் கொட்டாரம், நாடகசாலை, நான்கடுக்கு மாளிகை, தெற்கு கொட்டாரம், மணிமாளிகை, அன்னதான மண்டபம் போன்ற பழங்காலத்து கட்டடங்களையும் பார்த்து ரசித்து செல்கின்றனர். சுற்றுலாப்பயணிகளின் வரத்து அதிகரிப்பால் அப்பகுதியில் உள்ள கடைகளிலும் வியாபாரம் களை கட்டியுள்ளதால் வியாபாரிகளும் மகிழ்சியடைந்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.