எப்போதும் இயக்குநர் வெற்றிமாறன் தமிழ் சினிமா பற்றியும், அதன் தரம் பற்றியும் கவலைப்படுபவர். பல குறும்படப் போட்டிகளில் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு ஏற்ற அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். தற்போது அவரது ‘நாம் அறக்கட்டளை’யின் சார்பாக பண்பாட்டு ஆய்வகம் ஒன்றைத் துவக்கியுள்ளார். இதன் மூலம் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு நுழைவுத்தேர்வு வைக்கப் போகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டும், விளிம்பு நிலையிலும் இருக்கிறார்களா என்று நேரடியாக சென்று பரிசீலிக்கப் போகிறார்கள்.
அப்படிப் போய் பார்த்து அவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருக்கிறார்களா என்பதையும் ஆராய்ந்து அவர்களுக்கு ஊடகங்களில் வேலை செய்ய ஆர்வம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க போகிறார்கள். அவர்களின் வலியை, அவர்களின் பண்பாட்டை அவர்களே ஊடகங்களில் பதிவு செய்யும் முனைப்புடன் இருக்கிறார்களா என்பதும் கண்டறியப்படும்.
அப்படித் தேர்வு செய்யப்பட்டவர்கள் அவர்களின் குடும்பத்தினரின் ஒப்புதலோடு மாணவ-மாணவிகளுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளை கட்டணமின்றி ஏற்படுத்திக் கொடுத்து ஊடகத்துறையில் அவர்களை ஆளுமைகளாக்கப் போகிறார்கள். அதற்காகத்தான் இந்த நிறுவனத்தை இயக்குநர் வெற்றிமாறன் ஆரம்பித்திருக்கிறார்.
இந்த நிறுவனத்தின் துவக்க நாளில் கலைப்புலி எஸ்.தாணு, முதல் நபராக முன்வந்து ரூபாய் 1 கோடிக்கான செக்கை வெற்றிமாறன் தாயார் மேகலா சித்ரவேலிடம் கொடுத்தார். இந்த நிறுவனத்தில் படிக்கும் மாணவ மாணவிகளில் வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவருக்கு தனது நிறுவனத்தில் படத்தை இயக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த விழாவின்போது வெற்றிமாறன் மனைவி ஆர்த்தியும், ‘நாம் அறக்கட்டளை’ பொறுப்பாளர் வெற்றி துரைசாமியும் உடன் இருந்தார்கள். இந்தப் பாடத்திட்டத்தை வடிவமைத்தவர் பேராசிரியர் ஃபாதர் ராஜநாயகம்.
இயக்குநர் வெற்றிமாறனின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.