1 கிலோ ரூ.200; வறட்சியான பகுதிகளிலும் எலுமிச்சை சாகுபடி செய்யலாம்; எப்படித் தெரியுமா?

இன்று பல பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி செய்திட பல விவசாயிகள் ஆர்வமுடன் முன்வருகின்றனர். குறிப்பாக, நீர் குறைந்த பகுதிகளிலும், மண்வளம் குறைந்த பகுதிகளிலும் பல ஏக்கர் நிலமுடைய விவசாயிகள் ஏற்கெனவே பழமரங்கள் சாகுபடி செய்த இடங்களில் கலப்பு பயிராக, ஊடுபயிராக எலுமிச்சையை விரும்பி நட  முனைகிறார்கள். இவர்கள் முதலில் செய்ய வேண்டியது மண் மற்றும் நீர் மாதிரி சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும்.

எலுமிச்சை

பலரும் எலுமிச்சம் பழங்களைக் கடைகளில் வாங்கும்போது ஒரு பழம் 5 ரூபாய்க்குக் கேட்பதைப் பார்த்து இப்பயிரை நட ஆசைப்படலாம். பலரும் வீடுகளில் வைத்திட நிழலுள்ள இடங்களில் அல்லது கழிவு நீர் பயன்படுமென்றும் துணி துவைத்து நீர் செலுத்தியும் வளர்க்க முனையலாம்.

மண் வளம்

எலுமிச்சைக்கு நல்ல மண்வளம் தேவை. மண்வளம் குறைந்த இடத்திலும், நீர் தேங்கும் இடத்திலும் வளராது. அதேபோன்று களர் தன்மையோ உவர் தன்மையோ உள்ள இடங்களில் வளராது. அதாவது, மண் கார அமில நிலை 6.5 முதல் 7.8 வரையுள்ள இடம் மட்டுமே எலுமிச்சைக்கு ஏற்றது.

எலுமிச்சை ஒரு வெப்பமண்டலப் பயிர். அதிக குளிர் இருந்தால் எலுமிச்சை வளராது. சமவெளியிலும் மலைச்சரிவிலும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் வரை உள்ள கீழ்ப்பழனிமலை, சிறுமலை, சேர்வராயன்மலை, பச்சைமலை, கல்ராயன்மலை மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோன்று திருச்சி, வேலூர், மதுரை, திருநெல்வேலி, சேலம் மற்றும் கோயம்புத்துார் மாவட்டங்களிலும் இறவைப் பாசனத்தில் சாகுபடி செய்யப்படுகிறது.

எலுமிச்சை தோட்டம்

அளவில் பெரியதாகவும் வட்டமாகவும் பழ எடையில் 52% சாறுடைய அற்புத ரகம் பெரியகுளம்.1 ஆகும். ஆண்டு முழுவதும் காய்க்கும் எலுமிச்சை ரகமென்றால் பி.கே.எம்.1 ஆகும். நன்கு பராமரித்தால் நான்காமாண்டு முதல் ஒரு மரத்துக்கு ஒரு வருடத்துக்கு 1,500 பழங்கள் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 180 மரங்கள் தேவைப்படும். அதாவது 5.5 மீட்டர் இடைவெளியில் நட்டால் நல்லது. சராசரியாக ஒரு பழம் 25 கிராம் எடை இருப்பதாகக் கணக்கிட்டாலும் (180x1500x25கிராம்) ஆண்டுக்கு 6.5 டன் பழங்கள் கிடைக்கலாம்.

இப்போது ஒரு கிலோ எலுமிச்சை 200 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. குறைந்தபட்சமாக கிலோ ரூ.35/- வீதம் விற்றால்கூட ரூ.2.28 லட்சம் வரவாகும். நல்ல வருமானம் பெற எலுமிச்சையை நட திட்டமிடுங்கள். 

டாக்டர்.பா. இளங்கோவன், பேராசிரியர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர், பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், துவாக்குடி, திருச்சி -15

செல்போன்: 98420 07125.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.