கொல்கத்தா:
4 மாநிலங்களில் உள்ள ஒரு எம்.பி. மற்றும் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 12-ந்தேதி நடந்தது.
மேற்கு வங்காளத்தில் அசன்சோல் எம்.பி. மற்றும் பாலிகங்கே சட்டசபை தொகுதிக்கு வாக்குப்பதிவு நடந்தது. சத்தீஷ்கரில் கைராகர், பீகாரில் போச்சான், மராட்டியத்தில் கோலாப்பூர் வடக்கு ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
ஒரு எம்.பி., 4 சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
மேற்க வங்காள மாநிலம் அசன்சோல் தொகுதியில் பா.ஜனதாவை சேர்ந்த பாபுல் சுப்ரியோ எம்.பி.யாக இருந்தார். அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.
அசன்சோல் தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரபல நடிகர் சத்ருகன் சின்கா போட்டியிட்டார். பா.ஜனதா சார்பில் எம்.எல்.ஏ.வான அக்னிமித்ரா பவுல் நிறுத்தப்பட்டார்.
தொடக்கத்தில் இருந்தே சத்ருகன்சின்கா முன்னிலையில் இருந்தார். அவர் பா.ஜனதா வேட்பாளரை விட 10 ஆயிரம் ஓட்டுகள் கூடுதல் பெற்று முதல் சுற்றில் முன்னணியில் உள்ளார். தொடர்ந்து சத்ருகன் சின்கா முன்னணி வகித்தார்.
8 சுற்றுகள் தேர்வில் சத்ருகன் சின்கா 1 லட்சம் ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னணியில் உள்ளார். இதனால் அந்த தொகுதியில் அவர் வெற்றுபெறுகிறார். அசன்சோல் தொகுதியை திரிணாமுல் காங்கிரஸ் முதல் முறையாக கைப்பற்றுகிறது.
மேற்கு வங்காள மந்திரி சுபர்தேவி முகர்ஜி கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அங்குள்ள பாலிகங்கே சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.
இங்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பாபுல் சுபர்தோ நிறுத்தப்பட்டார். பா.ஜனதா சார்பில் கெயா கோஷ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தரப்பில் ஷரியாஷா ஹாலிம் போட்டியிட்டனர். காங்கிரசும் வேட்பாளரை நிறுத்தியது.
பாலிகங்கே சட்டசபை தொகுதியில் தொடக்கத்தில் இருந்தே திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பாபுல் சுப்ரியோ முன்னிலையில் உள்ளார்.
15 சுற்றுகள் முடிந்தபோது அவர் 12,108 வாக்குகள் கூடுதல் பெற்று இருந்தார். இந்த சுற்று முடிவில் பாபுல் சுப்ரியோ 40,623 வாக்குகள் பெற்று இருந்தார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 27,515 காங்கிரஸ் 4,881, பா.ஜனதா 8,094 ஓட்டுகளும் பெற்று இருந்தன.
மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடந்த 2 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலம் போச்ச ஹான் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளம் முன்னணியில் உள்ளது.
17-வது சுற்று முடிவில் ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் அமர்பஸ்வான் 56,291 ஓட்டுகள் பெற்று இருந்தார். பா.ஜனதா வேட்பாளர் பேபி குமாரி 32,498 ஓட்டுகள் பெற்று இருந்தார்.