கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக இசைக்கப்பட்ட சாமி அழைப்பு நையாண்டி மேளத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் தன்னை மறந்து நடனம் ஆடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது
பச்சை பட்டுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கிய வைபவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அழகரை வரவேற்கும் விதமாக இசைக்கப்பட்ட விதவிதமான மேளதாளங்களாலும், மக்கள் கூட்டத்தாலும் வீதிகள் குலுங்கின.
இந்த நிலையில் சித்திரை திருவிழா கொண்டாட்டத்தை காணவந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் , அங்கு இசைக்கப்பட்ட நையாண்டி மேளத்திற்கு உற்சாகமாக ஆடினார்.
முதுகில் சுமந்த பையுடன், கையில் வைத்திருந்த காமிராவுடன் அவர் குதித்து போட்ட ஆட்டத்துக்கு ஏற்ப மேளக்காரர் சளைக்காமல் மேளத்தை அடிக்க நம்ம ஊர் பசங்களும் கூட்டாக சேர்ந்து போட்ட ஆட்டத்தால் அந்த இடமே அதிர்ந்தது.
இரைச்சலோடு எத்தனை இசை வந்தாலும் நம் மண்ணின் இசை, மேற்கத்திய இசைக்கு என்றும் குறைந்ததில்லை என்பதை இந்தக் காட்சி பறைசாற்றுவதாக இருந்தது.