அம்பேத்கர்- மோடி ஒப்பீடு கருத்தில் இளையராஜா உறுதி: கங்கை அமரன் தகவல்

Gangai Amaran says Ilayaraja said he won’t apologize for Ambedkar-Modi comment: அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என இளையராஜா தெரிவித்ததாக கங்கை அமரன் கூறியுள்ளார்.

புளுக்ராப்ட் என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ள அம்பேத்கர் அன்ட் மோடி என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ள இசைஞானி இளையாராஜா, ”பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை ஆராய இந்த நூல் உதவும். அம்பேத்கர், நரேந்திர மோடி ஆகிய இரண்டு ஆளுமைகளுக்கும் இடையிலான ஆச்சரியமூட்டும் ஒற்றுமைகளையும் இந்த நூல் வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த இரண்டு ஆச்சரியமூட்டும் ஆளுமைகளும் சமூகரீதியில் அதிகாரமற்ற மக்கள் எதிர்கொள்ளும் சோதனைகளை வெற்றிகொண்டனர். இருவருமே வறுமையையும், ஒடுக்கும் சமூக அமைப்பையும் அருகில் இருந்து பார்த்து அவற்றை உடைத்தெறிந்தவர்கள். இருவருமே இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள். ஆனால் இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்ல. இருவருமே செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள்” என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா கருத்து தெரிவித்ததற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இது தொடர்பாக பேசிய இளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரன், அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு கூறிய கருத்துக்கு இளையராஜா மன்னிப்பு கேட்க முடியாது என தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: கெயில் எதிர்ப்பு; தற்கொலை செய்த விவசாயி குடும்பத்திற்கு ரூ5 லட்சம்: ஸ்டாலின்

தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு கங்கை அமரன் அளித்த பேட்டியில், ”இதுகுறித்து அண்ணன் இளையராஜாவிடம் பேசினேன். அப்போது, நான் எழுதிய கருத்து தவறு என்று மன்னிப்பு கேட்க வேண்டுமா? மற்றவர்கள் எப்படி கருத்து சொல்கிறார்களோ… அதே போன்று நான் என்னுடைய கருத்தைக் கூறினேன். அதற்கு எனக்கு எதிராக விமர்சனங்கள் வந்தால், நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய எண்ணத்தில் மோடி எப்படி இருக்கிறாரோ, அதுவே என் பேச்சில் வந்துள்ளது. பதவி வாங்குவதற்காகவெல்லாம் நான் மோடியை வேண்டுமென்று புகழ்ந்து பேசவில்லை. சொல்லப்போனால் எனக்கு அப்படியான எந்தப் பதவியும் தேவையில்லை. தனிப்பட்ட முறையில் மோடியை எனக்கு பிடிக்கும்… அவ்வளவுதான். நான் பல பாடல்களுக்கு இசை அமைக்கிறேன். சில பாடல்கள் நல்லா இருக்கு என்பார்கள். சில பாடல்கள் நல்லா இல்லை என்பார்கள். அதைப் போன்றுதான் எனது இந்தக் கருத்தும். இந்த விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன்.

எனக்கு கருத்து சொல்ல சுதந்திரம் உள்ளது. மோடியை எந்த அளவுக்கு பிடிக்குமோ அதை நான் கூறியுள்ளேன். ஒரு புத்தகத்தை கொடுத்து என்னிடம் முன்னுரை எழுத சொன்னார்கள். நான் ரெண்டு பேரையும் அலசி ஆராய்ந்து என்னுடைய எண்ணத்தை எழுதினேன். இதற்காக நான் எழுதிய கருத்து தவறு என்று மன்னிப்பு கேட்க முடியுமா? நான் எழுதிய ஏதாவது தவறு இருக்கிறதா? நான் பாஜகவைச் சேர்ந்தவன் இல்லை. எனக்கு மோடியையும் பிடிக்கும். அம்பேத்கரையும் பிடிக்கும். அதனால் இரண்டு பேரையும் ஒப்பிட்டு எனது கருத்தைத் தெரிவித்தேன். என் பார்வையில் அம்பேத்கர் சொன்னதையெல்லாம் மோடி செய்து வருகிறார். அதை நான் கூறியது தவறா? மோடியை பற்றியோ அல்லது அம்பேத்கரைப் பற்றியோ நான் தவறாக பேசியிருந்தால், அதைப் பற்றி விமர்சிக்கையில் அதற்கு நான் பதில் அளிக்க தயார் என்று இளையராஜா என்னிடம் கூறினார்” என்று கங்கை அமரன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.