லண்டன்,
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியா- இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷியா விவகாரத்தில் இந்தியா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் நடுநிலையாக இருந்து வருகிறது.
அதே சமயம் இங்கிலாந்து வெளிப்படையாக உக்ரைனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. ரஷியாவிற்கு எதிரான பொருளாதார தடைகளையும் இங்கிலாந்து அரசு விதித்துள்ளது.
இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடாக ரஷியா விளங்கி வருகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கையில் இந்தியாவின் மிக முக்கியமான கூட்டமைப்பாக ரஷியா உள்ளது. இந்த உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா.வில் ரஷியாவிற்கு எதிராக நடத்தப்பட்ட தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்கவில்லை.
இதனிடையே போரிஸ் ஜான்சன் ரஷியாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமரின் இந்திய பயணம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
தனது இந்திய பயணம் குறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில், “இந்தியா, ஒரு பெரிய பொருளாதார சக்தியாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், இங்கிலாந்திற்கு மிகவும் மதிப்புமிக்க மூலோபாய கூட்டமைப்பாகவும் உள்ளது.
வேலை உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை நமது இரு நாட்டு மக்களுக்கும் மிகவும் முக்கியமான தேவைகளாக உள்ளன. இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையிலான மூலோபாய பாதுகாப்பு, ராஜதந்திர மற்றும் பொருளாதார கூட்டாண்மை குறித்து ஆலோசிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.