இலங்கையில் காலி கோட்டையில் திரண்ட போராட்டக்காரர்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ஷெமோத்யா ஜெயசேகரா(23)
இலங்கையில் உள்ள சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் உணவு வணிக மேலாண்மை பிரிவில் இளங்கலை பட்டம் படிக்கிறார்.
போராட்டத்திற்கு முதல்முறையாக தனது பெற்றோருடன் வருகை தந்திருந்தார். அவரது தந்தை கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்புப் பிரிவில் பணிபுரிகிறார்.ஷெமோத்யா பேசுகையில், எங்களுக்கு தேவையானதை நாட்டை ஆளும் தலைவர்கள் தராததால், போராட்டக் களத்திற்கு வந்தேன். பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது. எங்களிடம் பணம் இருக்கிறது ஆனால் உணவு கிடைக்கவில்லை. தற்சமயம், சிலிண்டர் வீட்டில் இருக்கிறது. ஆனால், மீண்டும் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

படிப்பை முடித்த பிறகு இந்த நாட்டில் வேலை செய்ய விரும்புகிறேன். ஆனால் பல இளங்கலை பட்டதாரிகளை வேலை இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் தான் இருந்தோம். தற்போது, கொரோனா கட்டுக்குள் வந்தும் மின்சாரம் பற்றாக்குறையால் எங்கள் பல்கலைக்கழகம் இன்னும் நேரடி வகுப்புகளை தொடங்கவில்லை.
அகில் அகமது(22)
இவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர் ஆவர்.
அகில் பேசுகையில், ” இந்த அரசாங்கத்தாலும், இந்த அரசாங்கத்தை நடத்தும் குடும்பத்தாலும் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் . எங்களுக்கு ஜனநாயக நாடு வேண்டும். வகுப்புவாத மற்றும் இனவெறியால் நிரம்பிய சூழல் வேண்டாம். அமைதியான சூழல் தான் வேண்டும். கண்டியில் வசித்த எனது அத்தை 2018 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டார். அவரது வீடு மற்றும் வாகனங்கள் எரிக்கப்பட்டன. கல்லூரியில் கூட பொது இடங்களில் இனவெறியை எதிர்கொள்கிறேன். இனம், மதம் அல்லது பணம் போன்றவற்றால் துண்டப்படாத தகுதியான வேட்பாளர்களுக்கு அடுத்த முறை மக்கள் வாக்களிப்பார்கள். தற்போது நாட்டின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ராஜபக்சே குடும்பம் தான் காரணம் என தெரிவித்தார்.

டி எம் திஸாநாயக்க,(40), வழக்கறிஞர்
திஸாநாயக்க கூறுகையில், ராஜபக்சே குடும்பம் ஆட்சிக்கு வந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என சிவில் சமூக ஆர்வலர்கள் மக்களை எச்சரித்து வந்தனர். ஏனெனில் அவர்களிடம் முறையான பொருளாதார திட்டம் இல்லை. ஆனால், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதால் ராஜபக்சேக்கள் மாவீரர்களாக திகழ்ந்தனர். ஈஸ்டர் அன்று நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து, மக்கள் ராஜபக்சக்களை சிங்களவர்களின் ஏக பாதுகாவலர்கள் என்று கருதினர். அவர்கள் வெற்றி மழையில் நனைந்தனர். தற்போது, மக்களின் கண்கள் திறக்கப்பட்டுள்ளது என்றார்.

எம் கே ரகுநாதன்(68), ஓய்வுப்பெற்ற அரசு மருத்துவர்
ரகுநாதன் பேசுகையில், அரசியல்வாதிகள் மதம், மொழி, ஜாதி என்கிற அடிப்படையில் நாட்டை எப்படிப் பிரித்திருக்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில், போர் காலங்களில் கூட இல்லாத வகையில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், நான் வீட்டில் உட்காருவது சரியல்ல. மருத்துவராக எனது சேவையை ழங்குவதற்காக ஒரு சாதாரண மனிதனாக இங்கு வந்துள்ளேன் என்றார்.

ரெபேக்கா டேவிட்(43), உரிமை ஆர்வலர்
டேவிட் கூறுகையில், ராஜபக்சே பதவி விலக போவது இல்லை என்பதை நன்கு அறிவோம். இருப்பினும், உரிமை குரலை எழுப்பி அழுத்தத்தை கொடுக்கிறோம் என்றார். எதிர்ப்பாளர்களுக்கு அரசியலமைப்பு, ஜனாதிபதியின் அதிகாரங்கள் போன்றவற்றைத் “கற்பிக்கும்” அமர்வுகளை டேவிட் மற்றும் அவரது குழுவினர் நடத்தி வருகின்றனர்.

மேலும் பேசிய அவர், அரசாங்கத்திற்கு அல்ல, மக்களுக்கு உதவுங்கள். பாஜக அரசாங்கம் எங்கள் அரசாங்கத்திற்கு உதவும் என்ற சந்தேகத்தில் மக்கள் உள்ளனர், ஏனெனில் அவர்கள் பல விஷ்யங்களில் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.