எல்லாவற்றையும் எதிர்ப்பதுதான் எதிர்கட்சிகளின் வேலையா?- நடிகை குஷ்பு கேள்வி

சென்னை:

தமிழகத்தில் கவர்னர் அளித்த தேநீர் விருந்தை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. இந்த நிலையில் புதுவையில் நேற்று கவர்னர் மாளிகையில் நடந்த தமிழ்புத்தாண்டு நிகழ்ச்சியையும் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்தன. இது பற்றி பா.ஜனதாவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாவது:-

ஜனநாயகத்தில் எதிர்கட்சிகள், எதிர்ப்பு எல்லாம் அவசியம், ஆனால் சம்பந்தமே இல்லாமல் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டும்தான் எதிர்கட்சிகள் வேலையா?

நாடு முன்னேறுவதற்காக பாடு படுவோம் என்கிறார்கள். அதற்கு உங்கள் பங்களிப்பு என்ன? தமிழகத்தில் நீட் விலக்கு மசோதாவை காரணம் காட்டி புறக்கணித்துள்ளார்கள். அவர்கள் செய்யும் அரசியலை மக்கள் தெளிவாக பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

புதுவையில் நடந்தது தமிழ் பண்பாட்டு நிகழ்ச்சி. அதை புறக்கணிக்க என்ன காரணம்? பா.ஜனதா என்பதற்காக புறக்கணித்து இருக்கிறார்கள். அதாவது பா.ஜனதா எதை செய்தாலும், சொன்னாலும் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே கொள்கையோடு செயல்படுகிறார்கள். இந்த எதிர்ப்பு அரசியலை நிச்சயம் மக்கள் விரும்பமாட்டார்கள்.

அதேபோல் இசைஞானி இளைய ராஜா ஜனநாயக நாட்டில் தனது கருத்தை சுதந்திரமாக தெரிவித்துள்ளார். அதையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கிறார்கள். விமர்சிக்கட்டும். மக்கள் புரிந்து கொள்வார்கள். உண்மையான கருத்து சுதந்திரம் மோடி ஆட்சியில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்… பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது- தமிழக அரசு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.