பஞ்சாப் கிங்ஸ் அணி 3 வெற்றி (பெங்களூரு, சென்னை, மும்பை அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (கொல்கத்தா, குஜராத் அணிகளிடம்) 6 புள்ளிகள் பெற்றுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் அரைசதம் அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். முந்தைய 3 ஆட்டங்களில் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டிய மயங்க் அகர்வால் கடந்த ஆட்டத்தில் அசத்தி பார்முக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். பேட்டிங்கில் லிவிங்ஸ்டன் நல்ல நிலையில் உள்ளார். பேர்ஸ்டோ பேட்டிங்கில் இருந்து இன்னும் போதிய ரன்கள் வரவில்லை. அவரும் பங்களித்தால் பேட்டிங் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் ரபடா, வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள். சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் கடந்த ஆட்டத்தில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. அவர் பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் முதல் இரு ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோ அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு சென்னை, குஜராத், கொல்கத்தா அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி எழுச்சி கண்டுள்ளது. கடந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை சாய்த்தது. முந்தைய 2 ஆட்டங்களில் நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் ஆகியோர் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்தாலும், மிடில் ஆர்டரில் கலக்கிய ராகுல் திரிபாதி (71 ரன்கள்), மார்க் ராம் (ஆட்டம் இழக்காமல் 68 ரன்கள்) ஆகியோர் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். பந்து வீச்சில் டி.நடராஜன் (11 விக்கெட்), புவனேஷ்வர்குமார், மார்கோ ஜேன்சன், உம்ரான் மாலிக் ஆகியோர் எதிரணிக்கு சவால் அளித்து வருகிறார்கள். கொல்கத்தாவை புரட்டியெடுத்த கையுடன் களம் காணும் ஐதராபாத் அணி தனது உத்வேகத்தை தொடர முனைப்பு காட்டும். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த போட்டியில் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.