புதுச்சேரி : சித்ரா பவுர்ணமியையொட்டி, காமாட்சி அம்மன் கோவில் கிண்ணித்தேரோட்டம் நடந்தது.
புதுச்சேரி, காமாட்சி அம்மன் கோவில் கிண்ணித் தேர் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று வீதியுலாக வருவது வழக்கம். கடந்த 400 ஆண்டுகளாக கிண்ணித்தேரோட்டம் நடந்து வந்தது.இத்தேர் சிதிலமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தொடர்ந்து புதிய தேர் உருவாக்கப்பட்டு, கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி வெள்ளோட்டம்விடப்பட்டது.
தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவில் கிண்ணித் தேர் பிரம்மோற்சவ விழா, கடந்த 7ம் தேதி துவங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வந்தது. இக்கோவில் புதிய தேரோட்டம் சித்ரா பவுர்ணமியான நேற்று நடந்தது. அமைச்சர் லட்சுமிநாராயணன் வடம் பிடித்து புதிய வெண்கல கிண்ணித் தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரை மீண்டும் கோவிலில் நிலை நிறுத்தினர். தேர் திருவிழாவில் கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை காமாட்சியம்மன் கோவில் தேவஸ்தான நிர்வாகிகள், அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
Advertisement