விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேங்கடாசலபதி திருக்கோயிலில், சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சித்ராபெளர்ணமியை முன்னிட்டு, சாத்தூர் வைப்பாற்றில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது.
சாத்தூர் வேங்கடாசலபதி திருக்கோயிலில் காலையில், வேங்கடாசலபதி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். வேங்கடாசலபதிக்கு அதிகாலை முதல் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
இதில் சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். பின்னர் வேங்கடாசலபதி, சாத்தூரில் உள்ள நான்கு மாடவீதி மற்றும் ரதவீதிகளின் வழியாக அழகர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சாத்தூர் வைப்பாற்றில் மஞ்சள் நிறப் பட்டுடுத்தி ‘கோவிந்தா, கோபாலா’ என பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே அழகர் வைப்பாற்றில் இறங்கினார்.
ஆற்றில் இறங்கிய அழகர், சாத்தூர் வைப்பாற்றில் பெரியக்கொல்லபட்டி மற்றும் அய்யம்பட்டி கிராமத்தின் சார்பாக அமைக்கப்டடிருக்கும் திருக்கண்ணில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோயில் திருவிழா வழக்கப்படி பெரியக்கொல்லபட்டி கிராமத்திற்கு அழகர் செல்வது வழக்கம். அதன்படி பெரியகொல்லபட்டிக்கு குதிரை வாகனத்தில் அழகரை அழைத்து சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.