தமிழகத்தில் இலவசமாக 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கி சாதனை – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழகத்தில் குறுகிய காலத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1 லட்சம் விவசாயக் குடும்பங்கள் பயனடைவதோடு, அவர்களது வேளாண் உற்பத்தியால் தமிழகமும் வளர்ச்சி அடையும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்.23-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, ஒரு லட்சமாவது மின் இணைப்புக்கான ஆணையை உளுந்தூர்பேட்டை விவசாயி கண்ணப்பிள்ளைக்கு வழங்கினார். பின்னர், முதல்வர் பேசியதாவது:

விவசாயத்துக்காக பயன்படுத்தும் மின்சாரத்துக்கு விவசாயிகள் கடந்த 1990-ம் ஆண்டு வரை கட்டணம் செலுத்தி வந்தனர். அப்போது,12.09 லட்சம் விவசாய மின் இணைப்புகள் இருந்தன. தமிழகத்தின் வேளாண் உற்பத்தியை பெருக்கி, உழவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்குடன், 1990 நவ.19-ம் தேதி அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் என்ற அறிவிப்பை அப்போதைய முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

திமுக ஆட்சியில் அதிக மின் இணைப்பு

2001-06 அதிமுக ஆட்சியில் 1.62 லட்சம் விவசாய மின் இணைப்புகள், 2006-11 திமுக ஆட்சியில் 2.09 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. அதிலும், குறிப்பாக 2010-11 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 77,158 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டன.

அதன்பிறகு, கடந்த 10 ஆண்டுகால (2011-21) அதிமுக ஆட்சியில் 2.21 லட்சம் மின் இணைப்புகள், அதாவது, ஆண்டுக்கு சராசரியாக 22,100 மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் இணைப்பு வழங்கவில்லை.

4.52 லட்சம் பேர் விண்ணப்பம்

2021 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, பல்வேறு பிரிவுகளில் 4.52 லட்சம் விவசாய விண்ணப்பங்கள் பதிவு செய்து நிலுவையில் இருந்தன.

இந்த குறையை தீர்க்கும் வகையில், 2021-22 ஆண்டில் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது 1 லட்சம் பேர் இணைப்பு பெற்றுவிட்டார்கள்.

ஓராண்டுக்குள் வழங்குவதாக திட்டமிடப்பட்டு, அதற்கு முன்பாகவே 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1 லட்சம் விவசாயக் குடும்பங்கள் பயனடைவதோடு, அவர்களது வேளாண் உற்பத்தியால் தமிழகமும் வளர்ச்சி அடையும்.

ஒரு திட்டத்தை தொடங்குவது சாதனை அல்ல. அந்த திட்டத்தின் பயனை முழுமையாக பயனாளிகளுக்கு கொண்டுபோய் சேர்ப்பதுதான் உண்மையான சாதனை. கரோனா பெருந்தொற்று, வடகிழக்கு பருவமழை உட்பட பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையிலும் இப்பணி எவ்வித தொய்வும் இன்றி, செய்து முடிக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலப்பரப்பு அதிகரிப்பு

1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதன் மூலம், தமிழகத்தில் வேளாண் தொழில் செய்வோர் எண்ணிக்கை 21.80 லட்சத்தில் இருந்து 22.80 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் விவசாய நிலப்பரப்பு 2.13 லட்சம் ஏக்கர் அதிகரித்துள்ளது. இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தியதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தால் ரூ.803 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

முன்னதாக, சென்னை அண்ணாசாலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள மின்னகத்துக்கு சென்று ஆய்வு செய்த முதல்வர், அங்கு தொலைபேசி மூலமாக நுகர்வோரிடம் தொடர்பு கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எரிசக்தி துறை செயலர் ரமேஷ்சந்த் மீனா, மின்வாரிய தலைவர் ராஜேஷ்லக்கானி, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், மின்வாரிய விஜிலென்ஸ் டிஜிபி கல்பனா நாயக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.