தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய முதலமைச்சர் தன்னை வளர்த்துக் கொள்ளும் பணியில் இந்தி மொழியை வளர்த்து வருகிறார் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்
இதுகுறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் மொழியை வளர்ப்பது என்பது பிற மொழி பேசுபவர்களைத் தமிழ் கற்றுக் கொள்ள வழிவகை செய்வதும், பெரும் மாநிலங்களில் உள்ள மக்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவையாகும்.
ஆனால், தமிழக முதல்வர் தன்னை வளர்த்துக் கொள்ளும் பணியில், தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பணியில்… இந்தி மொழியை வளர்த்து வருகிறார் எனத் தகவல்கள் வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய தலைவராகப் பிரபலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, குறிப்பாக வட மாநிலங்களில் அவர் புகழ் பெற வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்படுகிறது.
மேலும் தொல்லியல் துறை இணையதளத்தில் இந்தி மொழியில் அறிவிப்புகள் இருப்பதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இந்தி மொழியில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றும் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. ஒரு பக்கம் இந்தி திணிப்பு என்று கூறி தமிழுக்குப் போராடுவது போல் நடிப்பது… மறுபக்கம் இந்தியில் தி.மு.க தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க.
தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்குப் பேரறிஞர் அண்ணா கூறிய இரு மொழிக் கொள்கையில் ஒன்றான ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்குப் பதில் ஏன் இந்தியை தி.மு.க தலைவர் பயன்படுத்துகிறார்? என்று மக்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒருவேளை ஊருக்குத்தான் உபதேசம் போலும்.
தி.மு.க அரசின் இந்த இரட்டை வேடத்திற்கு அ.தி.மு.க சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க-வின் செயல்பாடுகளைக் கண்டு மக்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர் இந்த ஏமாற்றம் வருங்காலத்தில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க ஆட்சியில் அமர வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.