திருவண்ணாமலை: தாய் மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் என ஆந்திரா மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார்.
சித்ரா பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று மாலை ஆந்திரா அமைச்சர் ரோஜா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கரோனா தொற்று பரவல் காரணமாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக சுவாமி தரிசனம் செய்ய வர முடியவில்லை. எனக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டபோது, அண்ணாமலையாரை வேண்டிக் கொள்வேன். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு அண்ணாமலையாரை கிரிவலம் வந்துள்ளேன். இப்போது, அமைச்சராக வேண்டும் என வேண்டிக்கொண்டேன். எனது வேண்டுதல் நிறைவேறியது. அமைச்சராக பொறுப்பேற்றதும், அண்ணாமலையாரை தரிசனம் செய்து, வேண்டுதலை நிவர்த்தி செய்துள்ளேன்.
தமிழகம் மற்றும் ஆந்திரா மாநில முதல்வர்கள் தோழமை உணர்வுடன் உள்ளனர். இதனால், தமிழகத்தை ஒட்டி உள்ள எனது தொகுதிக்கு பல்வேறு உதவிகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டு பெற்றுள்னேன். சிறப்பாக பணியாற்றி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு நற்பெயரை பெற்று தருவேன். உலகளவில் நமது ஆளுமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றால் தாய் மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும். ஆந்திராவில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது. எந்த ஒரு மொழியையும் யார் மீதும் யாரும் திணிக்க முடியாது. நமது பிள்ளைகள் தாய்மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை கற்றால்தான், உலகளவில் அவர்கள் தங்களது ஆளுமைகளை வெளிப்படுத்துவார்கள். தவறான நோக்கத்துடன் பார்த்தால் தவறாக தெரியும். நல்ல நோக்கத்துடன் பார்த்தால் நன்றாக இருக்கும்” என்றார்.
Source link