புதுடெல்லி: பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் பயமில்லாமல் தைரியமாக தேர்வை எதிர்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் தேர்வுக்குத் தயாராகுங்கள் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மாணவர்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.
கரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பயமோ, தயக்கமோ, தடுமாற்றமோ இல்லாமல் தேர்வு எழுத பிரதமரே முன்வந்து அவர்களை ஊக்குவித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் தன்னுடைய நமோ செயலியில் தேர்வுக்குத் தயாராகுங்கள் நிகழ்ச்சியில் நடந்தவற்றை புதுமையான முறையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறிதாவது:
தேர்வுக்குத் தயாராகும் நமது போர் வீரர்களுடன் (மாணவர்கள்) கலந்துரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. தேர்வுக்குத் தயாராகுங்கள் நிகழ்ச்சி தேர்வுகள் மற்றும் வாழ்க்கை தொடர்பான பல சிக்கல்களுக்கான துடிப்பான மன்றமாக உள்ளது. தேர்வுக்குத் தயாராகுங்கள் நிகழ்ச்சியில் நடந்த பல நிகழ்வுகள் புதுமையான முறையில் தொகுக்கப்பட்டு தற்போது நமோ செல்போன் செயலியில் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தற்போது நமோ செயலியில் உள்ள தேர்வுக்குத் தயாராகுங்கள் பகுதியில் மாணவர்கள், பெற்றோர் ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் படிக்கும் வகையில் புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 15 தலைப்புகளிலும், பெற்றோருக்கு 7 தலைப்புகளிலும் தகவல்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டு உள்ளன.