நிதி நெருக்கடியில் தள்ளாடும் இலங்கை.. நிதியுதவி அளிக்க இந்தியாவுக்கு கோரிக்கை.!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை, அடுத்த நான்கு மாதத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு இந்தியாவுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கடனுதவிகளை இந்தியா அளித்துள்ளது.

இருப்பினும், நாளுக்கு நாள் இலங்கையில் நிலைமை மோசமடைந்து வருவதால், ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் கோரி பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு குழு அமெரிக்கா சென்றுள்ளது.

பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காணும் முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை மேலும் கடனுதவி கேட்க உள்ளது. இதற்காக அந்நாட்டு நிதியமைச்சர் அலி சாப்ரி உள்ளிட்டோர் அடங்கிய குழு அமெரிக்கா சென்றது. இது தவிர உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகிய வங்கிகளிடமும் இலங்கை கூடுதல் நிதியுதவி கோரி பேசி வருகிறது.

இந்த நிலையில், சர்வதேச நிதி நாணயத்திடம் இருந்து நிதி கிடைக்க மூன்றில் இருந்து நான்கு மாதங்கள் ஆகக் கூடும் எனக் கூறியுள்ள இலங்கை, அதுவரையில் தொடர்ந்து நிதியுதவி அளிக்குமாறு இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் இந்த முன்மொழிவுக்கு இந்திய நிதியமைச்சர் இசைவு தெரிவித்திருப்பதாகவும், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவ முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஜப்பானும் கடனுதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு உதவ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை வெளிநாடுகளுக்கு ஏற்கனவே 3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளதும் அவற்றை தற்போதைக்கு திரும்ப செலுத்த முடியாது எனவும் கூறி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.