நெல்லை: உறவினர்களுக்குள் ஏற்பட்ட நிலத்தகராறு… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்!

நெல்லை மாவட்டம், மானூர் அருகே உள்ள கிராமம் நாஞ்சான்குளம். விவசாயிகள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் அழகர்சாமி, அந்தோணிராஜ் ஆகிய இரு சகோதரர்களின் வாரிசுகளுக்கு இடையே குடும்பத்துக்குச் சொந்தமான இரண்டு எக்கர் நிலத்தில் பிரசனை இருந்து வந்துள்ளது. நிலத்தகராறு தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்திருக்கிறது.

நிலம் தொடர்பான பிரச்னை தொடர்பாக ஏற்கெனவே மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்த நிலையில், அண்மையில் ஆர்.டி.ஓ நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் இனிமேல் மோதலில் ஈடுபடக் கூடாது என சமரசமாகப் பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். காவல் நிலையத்திலும் இரு தரப்பினரும் அடிக்கடி புகார் கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், அழகர்சாமி தரப்பினர் இன்று சர்ச்சைக்குரிய நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதற்கு எதிர்த்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அதில் ராஜமாணிக்கம், செந்தூர்குமார் மற்றும்உறவினர்கள் சேர்ந்து எதிர் தரப்பினர் மீது தக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

நிலத்தகராறு காரனமாக கொலையான சகோதரர்கள்

அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான ஜேசுராஜ்(73), மரியராஜ்(56) மற்றும் சகோதரி வசந்தா(40), ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்த வசந்தா பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பதிவு எழுத்தராகப் பணிசெய்து வந்தார். மரியராஜ் பாளையங்கோட்டையில் பாஸ்டராக இருந்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலையானதைத் தொடர்ந்து நாஞ்சான்குளம் பகுதியில் பதற்றம் நிலவியதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்ற நெல்லை சரக டி.ஐ.ஜி-யான பிரவேஷ்குமார், எஸ்.பி-யான கிருஷ்ணராஜ ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அந்தப் பகுதியில் அமைதி ஏற்படும் வகையில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொலையான வசந்தா

சம்பவம் குறித்துப் பேசிய டி.ஐ.ஜி-யான பிரவேஷ்குமார், “உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இதில் தொடர்புடைய ராஜமாணிக்கம், பேச்சியம்மாள், செந்தூர்குமார் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளோம். மேலும், இருவரைத் தேடி வருகிறோம்” என்றார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.