பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது அமல்? அறிக்கை தாக்கல் செய்த நிபுணர் குழு

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஆர். தாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திடம் அரசு உறுதியளித்துள்ளது.

இது குறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஆர்.தாஸ் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது: “பழைய ஓய்வூதிய திட்டத்துக்காக 19 ஆண்டு காலமாக போராடிக்கொண்டிருக்கிறோம். 6 லட்சத்துக்கும் மேல் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது கூட ஒரு அரசு ஊழியரின் பணி நிறைவு நிகழ்ச்சிக்குதான் சென்று வருகிறேன். இந்த புதிய ஓய்வூதிய திட்டம் என்கிற பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தில் பலரும் ஓய்வு பெற்றுள்ளார்கள். ஓய்வு பெற்றவர்களுக்கு எந்த வருவாயும் இல்லாததால் 100 நாள் வேலை உள்ளிட்ட வேலைக்கு போகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு வேறு வழியில்லை.

பழைய ஓய்வூதிய திட்டத்தில்தான் அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை, ஓய்வூதியத் தொகை ஆகிய இந்த 3 பலனும் கிடைக்கும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெற்றால் அவர்களுக்கு ஒரு ரூபாய் கூட இல்லாமல் நிராதாரவாக நடுநோட்டில் நிற்கிற கதையாகத்தான் இருக்கிறது.

சாதாரணமாக தனியார் துறையில் இருப்பவர்களுக்குகூட பாதுகாப்பு இருக்கிறது. அரசுப் பணி என்றால் பாதுகாப்பான வேலை என்கிறோம். ஆனால், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தால் எந்த பாதுகாப்பு கிடையாது. எதுவுமே இல்லாமல் ஓய்வு பெறுகிறார்கள்.

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த, சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் வழங்கியது. உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திடம் அரசு உறுதியளித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட குழு இத்தனை நாளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. அந்தக் குழுவை துரிதப்படுத்தி குழுவினுடைய அறிக்கையை பெற்றிருப்பதற்கு ஒரு வகையில் நாங்கள் முதல்வருக்கு நன்றி சொல்கிறோம்.

அதே நேரத்தில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துவிட்டார்கள். பல மாநிலங்களில் குழுவினுடைய பரிந்துரையை ஏற்று தாங்களும் நடைமுறைப்படுத்துவதாக கேரளா, டெல்லி யூனியன் பிரதேசங்களிலும் அறிவித்திருக்கிறார்கள்.

பொதுவாக நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால், கடந்த 19 ஆண்டு கால போராட்டத்தில், கடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கடுமையாக போராடிக்கொண்டு நின்றோம். சிறைக்கு சென்றோம், 17பி உள்ளிட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டது. உச்ச கட்ட போராட்டமே பழைய ஓய்வூதிய திட்டத்துக்காகத்தான். அந்த போராட்ட காலத்தில் நான் பழைய ஓய்வூதிய திட்டத்தை தருகிறேன் என்று கூறி எங்களை ஆறுதல்படுத்தி தேற்றியவர்தான் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின். அதனால், அவர் முதலமைச்சராக இருக்கிறார் என்பதால், அவர் பழைய ஓய்வூதிய திட்டத்தை தருவார் என்று லட்சக் கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். அவர் எங்களை அவருடைய குடும்பத்தில் ஒருவராகத்தான் பார்பார் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த ஆட்சியும் முதல்வரும் எங்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம் என்று திருப்தியாக இருக்கிறோம்.

இந்த சட்டமன்றம் நடக்கிற நேரத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறோம்.

பொதுவாக, ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு ஏதாவது செய்தால் பொதுமக்கள் ஏதாவது கோபப்படுவார்கள், இவர்களுக்கே இந்த ஆட்சியில் செய்கிறார்கள் என்ற எண்ணம் வந்துவிடுமோ என்ற அச்சுறுத்தலை உயர் அதிகாரிகள் முதலமைச்சருக்கு ஆலோசனையாகக் கூறி இதைத் தடுப்பதற்கு முணையலாம். ஆனால், அவர்கள் அப்படிபார்க்கக்கூடாது. அரசு ஊழியர்கள் சமுதாயத்தில் ஒரு அங்கம். ஒரு அரசு ஊழியர் என்றால் அவருடைய குடும்பத்தில் அவரைச் சார்ந்து 5-6 பேர்கள் இருக்கிறார்கள். நாங்கள் கேட்பது அவர்களுக்கு சேர்த்துதான். அந்த பார்வையோடுதான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்ப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.

அதனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.