தேர்தல் ஆய்வாளர் பிரசாந்த் கிஷோர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தல் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் விவாதித்தனர். அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தேர்தல் ஆய்வாளர் பிரசாந்த் கிஷோருடன் சோனியா காந்தி பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக தகவல் பரவி வருகிறது. அவர் கட்சியில் எந்தப் பொறுப்பையும் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டத்தை பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியிடம் விளக்கியுள்ளார்.உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசாவில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் தமிழ்நாடு, மேற்கு வங்கம் மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.