கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக 72 வயது மூதாட்டியைக் கொன்று 15 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த 17 வயது பள்ளி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாரியப்பன் வீதியில் மகன் செந்தில்வேலுடன் வசித்து வந்தவர் 72 வயதான நாகலட்சுமி. சனிக்கிழமை காலை செந்தில் வேல் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார்.
மூதாட்டி நீண்டநேரம் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக செந்தில்வேலுக்கு தகவல் கொடுத்தனர்.
நாகலட்சுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த சுமார் 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
தகவலறிந்து வந்த போலீசார், அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்களில் 17 வயது பள்ளி மாணவி, அடையாளம் தெரியாத இளைஞன் ஒருவனை மூதாட்டி வீட்டுப் பக்கம் பார்த்ததாகக் கூறியுள்ளார்.
ஆனால் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த மாணவிதான் அடிக்கடி மூதாட்டி வீட்டுப் பக்கம் சென்று வந்தது பதிவாகி இருந்தது.
மாணவியின் பேச்சும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், போலீசார் தங்களது பாணியில் விசாரணையை முன்னெடுத்தனர். அதில் கொலையைச் செய்தது தாம் தான் என மாணவி ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மாணவி இளைஞன் ஒருவனை காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்துகொள்வதற்கான செலவீனங்கள் குறித்து யோசித்தபோது, நாகலட்சுமி அணிந்திருந்த நகைகள் மாணவியின் கண்களில் பட்டுள்ளன. இதனையடுத்து செந்தில்வேல் வேலைக்குச் சென்றதும் அவரைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவியைக் கைது செய்த மேற்கு காவல் நிலைய போலீசார், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.