ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் பல்வேறு பதப்படுத்தப்பட்ட விலங்குகளைத் தனக்குச் சொந்தமான இடத்தில் சேகரித்து வைத்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் கிழக்கு வெலன்சியா (Valencia) பகுதியைச் சேர்ந்த ஒருவர் 1000 -க்கும் மேற்பட்ட பதப்படுத்தப்பட்ட விலங்குகளைச் சேகரித்து வைத்துள்ளார். இதில் 400 பாதுகாக்கப்பட்ட உயிரினங்களும்,ஒரு அழிந்த உயிரினமும்(Extinct organism) அடங்கும். பெடரா (Betera) என்ற இடத்தில் அவருக்குச் சொந்தமான இரண்டு சேமிப்புக் கிடங்குகளில் இந்த விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 50,000 ச.மீ பரப்பளவு கொண்ட இந்த இடங்களில் பதப்படுத்தப்பட்ட விலங்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதுவரை ஸ்பெயினில் கண்டுபிடிக்கப்பட்டதில் அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை இருந்தது இங்குதான். இங்கு கண்டறியப்பட்ட விலங்குகளில் ஸ்கிமிடர் ஓரிக்ஸ் (Scimitar oryx) என்னும் உயிரினம் ஒரு அழிந்த உயிரினமாகும். இந்த உயிரினம் 2000 ஆம் ஆண்டே அழிந்துவிட்டதாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் ( International Union for the conservation of nature) அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த உயிரினம் அண்டிலோப் என்னும் மான் வகையைச் சார்ந்தது. அழிந்துபோன உயிரினம் இவரிடம் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதவிர வங்கப் புலி மற்றும் சஹாரா பாலைவனங்களில் காணப்படும் அரிதான `அடடெக்ஸ்’ (Addax) என அழைக்கப்படும் வெள்ளை நிற மானும் இருந்தன. இவை இரண்டும் தற்போது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் ஆகும். மேலும் சிறுத்தை, சிங்கம், பனிக்கரடி, பனி சிறுத்தை ஆகிய விலங்குகளும் பதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டன. தந்தம் வைத்த யானைகளின் எண்ணிக்கை மட்டும் 198 ஆகும். இந்த சம்பவம் குறித்துக் கூறிய ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சட்ட அதிகாரி ஒருவர், “இந்த பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் மதிப்பு கள்ளச்சந்தையில் 31.5 மில்லியன் டாலர் (235 கோடி ரூபாய்) இருக்க வாய்ப்புண்டு. இதை வைத்திருந்த உரிமையாளர்மீது விலங்குகள் கடத்தல் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய வாய்ப்புள்ளது. அவரிடம் இந்த பதப்படுத்தப்பட்ட விலங்குகளை வைத்திருப்பதற்கான போதிய உரிமம் உள்ளதா என்பது சரி பார்க்கப்படும்” எனக் கூறியுள்ளார்.