தமிழகத்தில், மறு சீரமைக்கப்பட்ட ஒன்பது புதிய மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலின சமூகப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. அந்தப் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட கல்பனா சுரேஷ் என்பவர் 609 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஊராட்சி மன்றத் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், கல்பனா சுரேஷ் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், தேர்தல் வேட்பு மனுவில் ஆதி திராவிடர் என போலி சாதிச் சான்றிதழை இணைத்துக் கொடுத்து வெற்றிபெற்றுள்ளார் எனப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, கல்பனா சுரேஷை எதிர்த்துப் போட்டியிட்ட தோளப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் புகாரளித்தார்.
அந்த மனுவில், ‘‘ஆதி திராவிடர் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கல்பனா சுரேஷ் என்பவர் முறைகேடாக போலிச் சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார். ஆகவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ‘விழிக்கண்’ குழு நடத்திய விசாரணையில், கல்பனா சுரேஷ் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்றும், அவர் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்தது போலி சாதிச் சான்றிதழ் என்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது சாதிச் சான்றிதழ் ரத்து செய்து உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து, ஊராட்சி மன்றத் தலைவரின் போலிச்சான்று தொடர்பான விவரங்களும் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. விரைவில், கல்பனா சுரேஷிடமிருந்து ஊராட்சி மன்றத் தலைவர் பதவிப் பறிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.