ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை – 14 பேர் அதிரடி கைது!

டெல்லியில், ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தலைநகர் டெல்லியில், நேற்று, ஹனுமன் ஜெயந்தியையொட்டி, ஹனுமன் சிலை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
ஜஹாங்கிர்புரி
என்ற இடத்தில் ஊர்வலம் வந்த போது, இரு தரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். கடைசியில் இந்த மோதல் கலவரமாக மாறியது. இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.

கலவரத்தின் போது அங்கு பாதுகாப்பிற்கு வந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர். அப்போது போலீசார் மீது கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பொது மக்கள் உட்பட போலீசார் பலர் காயம் அடைந்தனர். இதை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஜஹாங்கிர்புரி வன்முறை
குறித்து, டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வன்முறைக்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இந்த சம்பவத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடத்த வன்முறை தொடர்பாக, இதுவரை 14 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வன்முறையில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.