5,500 அடி உயரத்தில் சித்திரை முழுநிலவுத் திருவிழா; கண்ணகி கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

மேற்குத்தொடர்ச்சிமலை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்குக் கோயில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்ரா பௌர்ணமியன்று சித்திரை முழுநிலவுத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா நோய் பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கண்ணகி கோயில் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பக்தர்கள்

பக்தர்கள் கேரளாவின் குமுளியில் இருந்து 18 கி. மீ தூரம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் வனப் பாதை வழியாக நடந்தும், ஜீப் மூலமாகவும், சென்று வருகின்றனர். அதேபோல் தமிழகத்தின் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பளியங்குடியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து ஆறு கி.மீ தூரம் நடந்தும் கண்ணகி் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர்.

கண்ணகி அம்மன்

பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, போக்குவரத்து, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1,500க்கும் மேற்பட்ட இரு மாநில போலீஸார் பாதுகாப்பு பணியிலும் இரு மாநில வனத்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

கண்ணகி கோயில்

மங்கல தேவி கோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட கண்ணகி அம்மன் பச்சை நிறப் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழக – கேரள மாநிலத்தை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணகி அம்மனை வழிபட்டனர். காலை 6 மணி முதலே தமிழக பக்தர்கள் சார்பில் 3 பானைகளில் பொங்கலும், கேரள பக்தர்கள் சார்பில் 3 பானைகளில் பொங்கலும் வைக்கப்பட்டு வழிபாடு தொடங்கியது. கம்பம் – கூடலூரில் உள்ள மங்கள தேவி அறக்கட்டளை சார்பில் இரு மாநில பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தேனி மாவட்டம் மட்டுமில்லாது சென்னை, பெங்களுரூ உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் கூடலூர் பளியங்குடி வழியாக மலைகளில் ஏறி நடந்தே கண்ணகி கோட்டத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர்.

இதேபோல குமுளியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஜீப்களிலும், நடைபயணமாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணகி கோட்டம் வந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்துச் சென்றனர்.

வழிபாடு

ஆண்டுக்கு 3 நாள்கள் கொண்டாடப்பட்ட கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவுத் திருவிழா ஒரு நாளாக மாற்றப்பட்டு நாளடைவில் மாலை 4 மணி வரை இருந்த அனுமதி நேரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டில் அதற்கான அனுமதி நேரமும் மதியம் 2 மணியாகக் குறைக்கப்பட்டதால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதற்கிடையே பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன் தலைமையிலான பாஜகவினர் இன்று பளியங்குடியில் உள்ள விண்ணேற்றிப்பாறை மலை அடிவாரத்தில் நின்று கண்ணகி கோயிலுக்குச் சாலை வசதி செய்து தரக்கோரித் தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் பளியங்குடி வனப்பாதை வழியாக நடந்து செல்வதற்காக வருகை தந்த பக்தர்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்வில் ஈடுபட்டனர்.

கண்ணகி

குமுளி வழியாகக் கண்ணகி கோயிலுக்குச் சென்று தமிழக பத்திரிகையாளர்களின் வாகனங்களுக்கு கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். கோயிலுக்குச் செல்லும் தமிழக பத்திரிகையாளர்களின் கேமிரா, மைக் உள்ளிட்ட உபகரணங்கள் எடுத்துச் செல்ல அனுமதி மறுத்தும், அனுமதிச் சீட்டு பெற்றுச் செல்ல வேண்டும் எனக் கூறி அம்பாடி சோதனைச் சாவடியில் வீண் அலைக்கழிப்பு செய்தனர்.

சோதனைச்சாவடியில் பத்திரிக்கையாளர்கள்

கேரள வனத்துறையினரின் இந்தச் செயலை கண்டித்து தமிழக பத்திரிக்கையாளர்கள் குமுளியில் உள்ள சோதனைச் சாவடி முன்பாக தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலில் ஈடுபடும் கேரள தற்போது பத்திரிகையாளரின் சுதந்திரத்தையும் பறிப்பதாகக் கூறி தரையில் அமர்ந்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை அறிந்து வந்த தமிழக பாஜக விவசாய அணி தலைவர் நாகராஜன் தலைமையிலான பாஜகவினர், தமிழக பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.