TNPSC Group 4: முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்

TNPSC VAO group 4 exam syllabus how to download?: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 தேர்வு ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்வு மூலம் 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பச் செயல்முறை 30.03.2022 முதல் ஆரம்பித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022.

இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் முழு சிலபஸையும் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, சிலபஸை எங்கு டவுன்லோடு செய்வது, சிலபஸில் என்ன உள்ளது என்பது பற்றிய தகவல்களை இப்போது பார்ப்போம்.

தேர்வு முறை

குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.

பாடத்திட்டம்

முதல் பகுதியில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறும். இதில், தமிழ் மொழிப்பாடப்பிரிவில் இருந்து 100 வினாக்கள் இடம்பெறும். இதில் தற்போது 40 மதிப்பெண்கள் பெறுவது தகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

பொது அறிவுப் பகுதியை பொறுத்தவரை 100 வினாக்களில் 75- பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். பொது அறிவு பகுதியில் கீழ்கண்ட தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

அறிவியல் : இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்

நடப்பு நிகழ்வுகள் : வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல் மற்றும் சில.

புவியியல் : புவி மற்றும் பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள் மற்றும் சில.

வரலாறு : சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், டில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகர மற்றும் பாமினி அரசுகள்

தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு மற்றும் சில.

இந்திய அரசியல் : அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் சில.

இதையும் படியுங்கள்: TET Exam Tamil Nadu: டெட் தேர்வு பேப்பர் 1, பேப்பர் 2 முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

பொருளாதாரம் : ஐந்தாண்டு திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளான் மற்றும் வணிக வளர்ச்சி மற்றும் சில.

இந்திய தேசிய இயக்கம் : தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பல தலைவர்களின் பங்கு மற்றும் சில.

திறனறி வினாக்கள் : தர்க்க அறிவு (Reasoning) மற்றும் கணிதத்தைக் கொண்டது. இதில் சுருக்குதல் (Simplification), எண்ணியல் (Number System), கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர் (Arithmetic Progression and Geometric Progression), சராசரி (Average), சதவீதம் (Percentage), விகிதம் மற்றும் விகித சமம் (Ratio and Proportion), மீ.பெ.வ (Highest Common Factor), மீ.சி.ம (Least Common Multiple), தனிவட்டி (Simple Interest), கூட்டுவட்டி (Compound Interest), அளவியல் பாடங்களில் பரப்பளவு (Area) மற்றும் கன அளவு (Volume), வேலை மற்றும் நேரம் (Time and Work), வேலை மற்றும் தூரம் (Time and Distance), வயது கணக்குகள் (Ages), இலாபம் மற்றும் நட்டம் (Profit and Loss), வடிவியல் (Geometry), இயற்கணிதம் (Algebra) போன்ற தலைப்புகளிலிருந்து வினாக்கள் வரும்.

இந்த குரூப் 4 தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்ய https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27012022.pdf என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள். அல்லது தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினை பார்வையிடுங்கள். குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவர்கள் இந்த இணைப்பை பயன்படுத்தி சிலபஸை பதிவிறக்கம் செய்து அதற்கேற்றார் போல் தயாராகிக் கொள்ளுங்கள்.

இந்த குரூப் 4 தேர்வில், இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) ஆகிய 7 பணியிடங்கள் நிரப்பப்படும்.

இந்த குரூப் 4 தேர்வு எழுத பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் இந்த தேர்வை எழுதலாம். தமிழ்நாடு அரசு விதிகளின் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு சலுகைகளும் உண்டு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.