"அடுத்த ஜென்மத்தில் பூர்ணிமாவாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்… ஏன்னா?" – கே.பாக்யராஜ்

புத்தகத்தின் நாயகி நடிகையும் இயக்குநர் கே.பாக்யராஜின் மனைவியுமான பூர்ணிமா பாக்யராஜ்.

ரஜினிகாந்த்தின் முன்னுரையுடன் ஒரே நேரத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியான புத்தகங்களைக் கவிஞரும் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கப் பாண்டியன் வெளியிட, நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், சிநேகா இருவரும் பெற்றுக் கொண்டனர்.

“இந்தி மலையாளம், தமிழ் என ஒரு சமயத்தில் மூன்று மொழிப் படங்களிலும் பிசியாக இருந்தவர் பூர்ணிமா. 1983 தீபாவளிக்குத் தமிழில் ரஜினியுடன் நடித்த ‘தங்கமகன்’, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த படம், மலையாளத்திலும் ஒரு படம் என ஒரே நேரத்தில் மூன்று படங்கள் ப்ளாக் பஸ்டர் கொடுத்தவர்.

பூர்ணிமா பாக்யராஜ் புத்தக வெளியீட்டு விழா
பூர்ணிமா பாக்யராஜ் புத்தக வெளியீட்டு விழா

சினிமாவில் பரபரப்பாக இருந்தாலும் சரியான நேரத்தில் திருமண முடிவையும் எடுத்ததன் மூலம், குடும்ப வாழ்க்கையையும் வெற்றிகரமானதாக்கிக் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு குணசித்திர வேடத்தில் விஜய், அஜித் இருவரின் படங்களிலும் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை மறுத்தவர். அதேநேரம் தற்போது சீரியல் பக்கம் வந்து இன்றும் நடிப்பை நிறுத்தவில்லை…” என்கிற ரீதியில் பூர்ணிமாவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைச் சுவைபட விவரிக்கிறது நூல்.

“நான் ஏதோ சாதிச்சிட்டதா என்னைப் பத்தி இந்தப் புத்தகத்துல எழுதியிருக்காங்க. சாதிச்ச பல மனிதர்களை என் வாழ்க்கை நெடூக என்னால சந்திக்க முடிஞ்சதுங்கிறதுதான் எனக்குக் கிடைச்ச திருப்தி” எனத் தன் உரையை சிம்பிளாக முடித்தார் பூர்ணிமா.

முழுக்க பெண்களால் நிரம்பி வழிந்த அந்த மேடையில் பேச அழைக்கப்பட்ட ஒரே ஆண் பாக்யராஜ்தான்.

“சினிமாவுல அவங்க பிசியா இருந்த நேரத்துல நான் போய் பொண்ணு கேட்டேன். உடனே எங்க கல்யாணத்துக்கு அவங்க அப்பா சம்மதிச்சார் பாருங்க, அதுதான் பெரிய விஷயம். சினிமாவுல முக்கால்வாசிப் பேருக்கு அந்த மனசு வராது. பூர்ணிமாவுமே அப்பவே தெளிவா முடிவெடுக்கிறவங்களா இருந்தாங்க. எப்படியோ சினிமாவையும் குடும்ப வாழ்க்கையையும் கரெக்டா பேலன்ஸ் பண்ணி எங்க வாழ்க்கையை வாழ்ந்துட்டோம்.

பூர்ணிமா பாக்யராஜ் புத்தக வெளியீட்டு விழா
பூர்ணிமா பாக்யராஜ் புத்தக வெளியீட்டு விழா

‘கணவன் மனைவின்னா சண்டை வந்திருக்குமே’ன்னு எல்லாம் எங்களைப் பாத்துக் கேட்டிருக்காங்க சிலர். சண்டை இல்லாத வீடு ஏது? ஆனா வாக்குவாதம் முத்தி ஏதேச்சையா நாம கையை ஓங்கினா பொலபொலன்னு கண்ணீர் வந்திடும், அந்தப் பக்கமிருந்து. பிறகு எங்கிட்டு சண்டை போடறது?

ஆனா ஒரு விஷயம்ங்க. இன்னொரு ஜென்மம்னு இருந்தா நான் பூர்ணிமாவாகவும் அவங்க பாக்யராஜாகவும் பிறக்கணும்னு ஆசைப்படுறேன். அப்பத்தான் அவங்க எனக்குச் செஞ்ச பணிவிடைகளை அவங்களுக்கு நான் திரும்ப செய்ய முடியும்” எனப் பேச்சை முடித்து விட்டு, அப்படியே பூர்ணிமாவைத் திரும்பிப் பார்த்தார்.

இப்போதும் பூர்ணிமாவின் கண்களில் இருந்து கண்ணீர்… ஆனந்த‌க் கண்ணீர்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.