லக்னோ: கோவிட் பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருவதால் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், கோவிட் பரவல் படிப்படியாக குறைந்து ஒருநாள் கோவிட் பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழாக பதிவாகி வந்தன. இதனால், கடந்த மார்ச் மாதம் 31ம் தேதியுடன், நாடு முழுவதும் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக டில்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கோவிட் பாதிப்புகள் சற்று அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,183 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், முன்னெச்சரிக்கையாக உ.பி.,யில் சில பகுதிகளில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கவுதம் புத்தா நகர், காசியாபாத், ஹாபூர், மீரட், புலந்த்ஷாஹர், பாக்பத் மற்றும் லக்னோ ஆகிய 7 பகுதிகளில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டு உள்ளது. கோவிட் பரவல் அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக உத்தர பிரதேச மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Advertisement