டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் ஆயுதங்களுடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதின் ஒவைசி கேள்வியெழுப்பியுள்ளார்.
டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த 16-ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அதன் பிறகு, இந்து அமைப்புகள் சார்பில் அங்கு ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இதனிடையே, வன்முறையை தடுக்கச் சென்ற காவல்துறையினர் மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில் துணை ஆய்வாளர் படுகாயமடைந்தார். இதையடுத்து, துப்பாக்கியால் சுட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதேபோல, இந்த வன்முறையில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஒவைசி ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “மத ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் எதற்காக ஆயுதம் ஏந்தி வர வேண்டும்? இவ்வாறு ஆயுதமேந்தி வந்தவர்கள் மீது ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? குறைந்தபட்சம் இந்த நடவடிக்கைக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. மேலும், டெல்லி காவல்துறை இந்த வன்முறை விவகாரத்தில் ஒரு தரப்பினர் மீதே நடவடிக்கை எடுக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எப்போது உள்துறை அமைச்சர் ஆனாரோ, அன்று முதல் டெல்லியில் கலவரங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது” எனக் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM