அமெரிக்காவில் இருந்து மனைவி அனுப்பிய ரூ.1 கோடியே 20 லட்சம் பணத்தை கள்ளக்காதலிக்கு செலவு செய்த போதகர்

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் கோழிக்கோடு, கோடஞ்சேரியை சேர்ந்தவர் சிஜூ கே ஜோஸ் (வயது 52). போதகர்.

சிஜூ கே ஜோசின் மனைவி அமெரிக்காவில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இதனால் சிஜூ கே ஜோஸ் மட்டும் ஊரில் வசித்து வந்தார்.

இவரது மனைவி அமெரிக்காவில் வேலை பார்த்து கிடைக்கும் பணத்தை ஊரில் உள்ள கணவருக்கு மாதம்தோறும் அனுப்பி வைத்தார். இதற்காக அமெரிக்காவில் உள்ள வங்கியில் கணவர் மற்றும் மனைவி பெயரில் கூட்டு கணக்கு தொடங்கினர். இந்த கணக்கில் சிஜூ கே ஜோசின் மனைவி பணம் போட்டு வந்தார்.

கேரளாவில் இருக்கும் சிஜூ கே ஜோஸ் செலவுக்கு மட்டும் இந்த கணக்கில் இருந்து பணம் எடுத்து கொள்வார். சமீபத்தில் சிஜூ கே ஜோசின் மனைவி அமெரிக்காவில் இருந்தபடி அவரது வங்கி கணக்கை பரிசோதித்து பார்த்தார். அதில் ரூ.1 கோடியே 20 லட்சத்து 40 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிஜூ கே ஜோசின் மனைவி, இதுபற்றி கணவரிடம் கேட்டார். ஆனால் அவர் சரியான பதில் கூறவில்லை. இது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் இதுபற்றி ஆலப்புழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.

போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிஜூ கே ஜோசின் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்தனர். இதில் சிஜூ கே ஜோஸ், காயங்குளம், பாசுரபவனம் பகுதியை சேர்ந்த பிரியங்கா (30) என்பவரின் கணக்குக்கு மாற்றி இருப்பது தெரியவந்தது.

பிரியங்காவுக்கு, சிஜூ கே ஜோஸ் பணம் வழங்கியது ஏன்? என போலீசார் ரகசியமாக விசாரித்தனர். இதில் சிஜூ கே ஜோசின் மனைவி அமெரிக்கா சென்றதும், அவர் காயங்குளம் பிரியங்காவுடன் பழக தொடங்கினார். நாளடைவில் இருவரின் பழக்கமும் நெருக்கமாகி கள்ளக்காதலர்கள் ஆனார்கள். அதன்பின்பு கள்ளக்காதலியின் வங்கி கணக்கிற்கு சிஜூ கே ஜோஸ், ஒரு கோடியே 20 லட்சம் பணத்தை தாரளமாக வழங்கியதும், அந்த பணத்தில் இருவரும் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையே போலீசார் தன்னை பற்றி விசாரிப்பதை அறிந்த சிஜூ கே ஜோஸ், தனது கள்ளக்காதலியுடன் தலைமறைவானார். அவர் எங்கே என்று தேடிய போது இருவரும் நேபாள நாட்டில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து லுக் அவுட் நோட்டீசு பிறப்பித்தனர். இந்த நோட்டீசு அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கள்ளக்காதலியுடன் நேபாளத்தில் தங்கி இருந்த சிஜூ கே ஜோஸ் 2 நாட்களுக்கு முன்பு டெல்லி வந்தார். அவர் மீது லுக் அவுட் நோட்டீசு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால், இது பற்றி டெல்லி விமான நிலைய அதிகாரிகள், கேரள போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆலப்புழா போலீஸ் சூப்பிரண்டு ஜெயதேவ் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்று சிஜூ கே ஜோஸ் மற்றும் அவரது கள்ளக்காதலி பிரியங்கா இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். கள்ளக்காதலிக்காக போதகர் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.