அம்பேத்கர் – மோடி ஒப்பீடு கருத்தை திரும்ப பெறமாட்டேன் – இளையராஜா உறுதி
பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்த நிலையில், தனது கருத்தை பின் வாங்க போவதில்லை என இளையராஜா கூறியதாக அவரது தம்பியும், இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார். மேலும் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இளையராஜாவை விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், ‛பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து மோடியை இளையராஜா புகழ்வதாக கூறி பலரும் அவரை விமர்சனம் தெய்தனர். அதேநேரத்தில் தமிழக பா.ஜ.,வினர் இளையராஜாவின் கருத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். சிலர் இளையராஜா தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என குரல் கொடுத்தனர். ஆனால் இளையராஜா மறுத்துவிட்டார்.
|
இதுகுறித்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கூறியதாவது : இதுபற்றி இளையராஜாவிடம் பேசினேன். அதற்கு அவர் மற்றவர்கள் கருத்து சொல்வது போன்று நானும் என் கருத்தை கூறினேன். அதற்கு எதிர் விமர்சனங்கள் வந்தாலும் நான் ஏற்கிறேன். என் எண்ணத்தில் மோடி உள்ளார், அதுவே என் பேச்சில் வந்தது. பதவி வாங்க வேண்டும் என நான் அவரை புகழ்ந்து பேசவில்லை. எனக்கு எந்த பதவியும் தேவையில்லை. நான் பாடல்களுக்கு இசையமைக்கிறேன். சிலர் நன்றாக இருக்கும் என்பார்கள், சிலர் நல்லா இல்லை என்பார்கள். அதுபோன்றே இந்த கருத்தையும் ஏற்கிறேன். என் கருத்தை சொல்ல சுதந்திரம் உள்ளது. மோடியையோ, அம்பேத்கரையோ நான் விமர்சித்து பேசவில்லை. இதற்காக நான் ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் படத்திற்கு போட்ட டியூனை திரும்ப பெற மாட்டேன். அதேபோல் நான் கூறிய கருத்தையும் திரும்ப பெறவேண்டிய அவசியமில்லை'' என சொன்னதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
ஜேபி நட்டா கண்டனம்
பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இளையராஜாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛தமிழகத்தில் ஆளும் தரப்புக்கு ஆதரவானவர்கள் இளையராஜாவை குறிவைத்து கருத்துகளால் தாக்குகின்றனர். தங்களுக்கு சாதகமாக பேசவில்லை என்பதற்காக இசைமேதையை அவமதிப்பது சரியான அணுகுமுறை கிடையாது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி கொள்கைகள், பார்வைகள் இருக்கும். தங்களுக்கு மட்டுமே ஒத்தூத வேண்டும் என நினைப்பது, வலியுறுத்துவது எப்படி சரியான ஜனநாயகமாகும்?'' என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.