திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் இருக்குழந்தைகளுடன் பயணம் செய்த பெண்ணிடம் டிக்கெட் எடுக்கக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பேருந்தின் நடத்துநர், அப்பெண்ணை பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கலில் இருந்து மாமரத்துபட்டி செல்லும் அரசுப் பேருந்தில் யசோதா தேவி என்ற பெண் அவரது இரண்டரை வயது மகன் மற்றும் கைக்குழந்தையுடன் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தின் நடத்துனர் பால்பாண்டி, பெண்ணை டிக்கெட் எடுக்க கூறியதால், பெண்களுக்கு பேருந்தில் இலவசம் தானே என யசோதா தேவி முறையிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவரின் மகன் தரணிதரனுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என நடத்துநர் கூற 3 வயது நிரம்பினால் தானே குழந்தைகளுக்கு பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என அப்பெண் வாதிட்டுள்ளார்.
இதனையடுத்து கொட்டும் மழையில் அப்பெண்ணையும் குழந்தைகளையும் நடத்துநர் பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.